May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வங்கக் கடலில் உருவாகிறது புயல்

சென்னை, மே 6

தெற்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நேற்று சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஓர் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (7.5.22) மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது (8.5.22) அன்று புயலாக மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து 10.5.22 அன்று ஆந்திரா-ஒரிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவக்கூடும்.

எனவே, 7.5.22ல் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

8.5.22 மற்றும் 9.5.22 அன்று மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தமட்டில், இன்று அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Spread the love