January 24, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வங்கி வாடிக்கையாளர் நல மசோதா தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்

நிதி நெருக்கடியில் சிக்கும் வங்கிகளில் பணம் சேமித்து வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அத்தொகையை உரிய காலத்தில் திரும்பப் பெற்று பலன் அடையும் வகையில் வாடிக்கையாளர் நல மசோதாவை நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நிதி நெருக்கடிக்கு உள்ளாகும் வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை திரும்பப் பெற காப்பீடு வசதி இருந்தது. ஆனால் இது சர்ச்சையை ஏற்படுத்திய பின்பு இந்தத் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதுவும் வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, நிதி நெருக்கடிக்கு உள்ளாகும் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்போர் தங்கள் சேமிப்புத் தொகை முழுவதையும் படிப்படியாகத் திரும்பப் பெறுவதற்கான வழிமுறைகள் வகுக்ககப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. அதற்காக டெபாசிட் காப்பீடு-கடன் உத்தரவாத அமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நடப்புநிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலின் போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

இந்த மசோதா வாயிலாக நிதி நெருக்கடிக்கு உள்ளாகும் வங்கிகளின் வாடிக்கையாளர்கள் முழு பலன் அடைய முடியும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்தச் சட்டத் திருத்த மசோதா, பட்ஜெட் கூட்டத்தொடரின்போதே தாக்கல் செய்யப்படுவதாக இருந்தது.

ஆனால், கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முன்னதாகவே முடித்துக் கொள்ளப்பட்டதால் அந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை

தற்போது அந்த மசோதா தயாராகி விட்டதாகவும், அதற்கு மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பின்பு நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெபாசிட் காப்பீடு-கடன் உத்தரவாத அமைப்பை ரிசர்வ் வங்கி நிர்வகித்து வருகிறது. பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் உள்ள வாடிக்கையாளர்களின் சேமிப்புத் தொகைக்கு அந்த அமைப்பு காப்பீடு வழங்குகிறது.

பஞ்சாப்-மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி, யெஸ் வங்கி, லக்ஷ்மி விலாஸ் வங்கி உள்ளிட்டவை நிதி நெருக்கடியில் சிக்கியதால், அவற்றின் வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புத் தொகையை முழுமையாகப் பெற முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த விவகாரங்கள் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் டெபாசிட் காப்பீடு-கடன் உத்தரவாத அமைப்பு சட்டத் திருத்த மசோதா அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Spread the love