October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி

விருதுநகர், அக்.13

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறையின் மூலம் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு இயற்கை சீற்றத்தால் ஏற்படும் அழிவிலிருந்து காத்தல் மற்றும் குறைத்தல் ஒத்திகைப் பயிற்சி மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது.

இந்த ஒத்திகைப் பயிற்சியின் போது பயிற்சிக்குழுவினர் தெரிவித்ததாவது:-

அனைவரும் இயற்கை சீற்றத்தால் ஏற்படும் அழிவிலிருந்து நம்மையும் மற்றவர்களையும் எப்படி எல்லாம் காத்துக்கொள்வது போன்ற வழிமுறைகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தான் பேரிடர் ஒத்திகை பயிற்சி நடத்தப்படுகிறது. எதிர்வரும் வடகிழக்கு பருவமழையின் போது பொதுமக்கள் அதிகமான மழைபெய்யும் போது அதிகமாக தண்ணீர் செல்லும் ஓடைகளையோ நதிகளையோ பாதுகாப்பாக கடக்க வேண்டும். மழைகாலங்களில் காற்றினால் மின்கம்பிகள் அருந்து விழுந்திருந்தால் அதன் அருகில் செல்லக்கூடாது. உடனடியாக இது குறித்து சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

பேரிடர் காலங்கள் மற்றும் விபத்துக்களில் தீயணைப்பு மற்றும் மீட்புபணித்துறைக்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்களைக் கொண்டு எவ்வாறு பணிபுரிந்து வருகின்றோம் என்றும் பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்தும் மீட்கப்பட்ட அவர்களை எவ்வாறு தூக்கி சென்று ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கலாம் என்றும் தீ விபத்தின் வகைகள் குறித்தும் அதனை ஆரம்ப நிலையில் தடுக்கும் முறைகள் குறித்தும் பெரும் தீ விபத்துக்கள் மற்றும் ஆயில் தீ விபத்துக்களை எவ்வாறு தீயணைப்பு ஊர்திகளை கொண்டு எளிதில் அணைக்கலாம் எனவும் விளக்க உரை மற்றும் செயல்முறை விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது.

இது போன்ற செயல்முறை பயிற்சிகளில் நாம் பங்குபெற்றதன் மூலம் ஆபத்து காலங்களில் நாமும் மீட்ப்புப்பணித்துறையினருடன் இணைந்து செயல்பட உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார்.

Spread the love