எம்ஏஐடி அறிக்கை தகவல்
புது தில்லி, ஏப்.26
எலக்ட்ரானிக்ஸ் வன்பொருள் பழுதுபார்க்கும் மையமாக இந்தியா மாறுவதை அடுத்து, 2025ம் ஆண்டிலிருந்து, ஆண்டுக்கு, ரூ.1.5 லட்சம் கோடி வருவாயை ஈட்ட முடியும் என்றும்; 50 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும், ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வன்பொருள் தொழிலமைப்பான, எம்ஏஐடி அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவை, எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை பழுதுபார்க்கும் அவுட்சோர்சிங் மையமாக மாற்றுவதற்காக எடுக்கப்படும் முயற்சிகள், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க உதவிகரமாக அமையும் என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உலகின் மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் தொழிலாக, எலக்ட்ரானிக்ஸ் வன்பொருள் பழுதுபார்ப்பு என்பது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நாட்டில், இந்த சந்தை அடுத்த நான்கு ஆண்டுகளில், அதாவது, 2025ம் ஆண்டுக்கு பிறகு, ஆண்டுக்கு, ரூ.1.5 லட்சம் கோடி வருவாய் ஈட்டுவதாக இருக்கும். மேக் இன் இந்தியா திட்டத்தின் துணையுடன், இந்த துறையானது, அரசுக்கு அதிக அளவில் வரி வருவாய் தருவதாக இருக்கும்.
மேலும், இந்த வாய்ப்பை பயன்படுத்துவதன் மூலம், உலகம் முழுவதிலிருந்தும் முதலீடுகளை ஈர்க்கலாம் என தெரிவித்துள்ளது. இதன் மூலம் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். அத்துடன் வரி உள்ளிட்டவை மூலமாக அரசுக்கான வருவாயும் அதிகரிக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.