August 14, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வருமானத்தை அள்ளி தரும் அஸ்வகாந்தா மூலிகை சாகுபடி

18 வகையான மருத்துவ குணம் கொண்டது அஸ்வகாந்தா மூலிகையாகும். அஸ்வம் என்றால் வட மொழியில் “குதிரை” என்று அர்த்தம். கந்தம் என்றால் “பலம்” என்று அர்த்தம். இதை சாப்பிட்டால் குதிரை போன்ற பலம் கிடைக்கும் என்பதால் இந்த செடிக்கு இந்த பெயர் வந்ததாக கூறப்படுவதுண்டு. அது மட்டுமல்லாமல் இதன் இலைகளை நுகர்ந்து பார்த்தால் “குதிரையின் வாசம்” இருப்பதால் இந்த மூலிகைக்கு “அஸ்வ காந்தா” என்ற பெயர் வந்ததாக கூறப்படுகின்றது. தமிழில் இதனை “அமுக்ரான் கிழங்கு” என்றும் “மூலிகை வயக்ரா” என்றும் அழைக்கப்படுகின்றது. சைனீஸ் ஜின்ஸெங் என்ற பெயரில் சீனாவில் அதிமாக சாகுபடி செய்யப்படுகிறது.

ரகங்கள் : போஷிதா, ரஷிதா, ஜவஹர் 20.

சோலானேசி குடும்பத்தை சேர்ந்த தாவரம் இதன் தாவிரவியல் பெயர் (WITர்ANIA SOMNIFERA). விதை அளவு எக்கருக்கு 3 கிலோ போதுமானது. நாட்டு மாட்டு கோமியத்தில் விதையை ஊறவைத்து நடவு செய்யலாம். அடியுரமாக மக்கிய சாண உரம், ஆட்டு உரம் இடலாம். எக்காரணம் கொண்டு இரசாயன உரங்கள் இடக்கூடாது. இதன் வேர் மருத்துவ பயன்பாட்டில் உள்ளதால் ஆய்வுக்கு உட்படுத்தி தான் கொள்முதல் செய்வார்கள். வேரில் இரசாயனங்களின் எச்சம் இருந்தால் விற்பனை செய்ய முடியாது.

பட்டம் : நவம்பர்- டிசம்பர் (மழை காலம் முடிவுக்கு வரும்போது) குறிப்பாக வயலில் தண்ணீர் தேங்க கூடாது. நல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண் வண்டல் மண்ணில் வளரும். பகலில் வெப்பம் அதிகமாகவும் இரவில் குறைவாகவும் இருந்தால் பயிர் நன்றாக வளரும். இது 5 மாத பயிர். இரண்டு முறை பயிர் களைதல் மற்றும் களை எடுப்பது செய்ய வேண்டும். ஆணி வேர் வளர்ச்சி எற்பட செடிக்கு செடி 5-10 சென்டி மீட்டர் இடைவெளி வேண்டும்.

பயிர் பாதுகாப்பு : சில சமயங்களில் புள்ளி வண்டு தாக்குதல் தென்படும். இயற்கையான பூச்சி கொல்லியை பயன்படுத்த வேண்டும். (மீன் அமிலம், பஞ்ச காவியா பயன்படுத்தலாம்).
90 முதல் 135 நாட்களில் வேர் நன்றாக வளரும்.

அறுவடை நுட்பம் : வளர்ந்து இருக்கும் செடியை பிடுங்கி வேரை ஓடித்துப் பார்க்க வேண்டும். நன்றாக ஒடிந்தால் அறுவடை தொடங்கி விடலாம். அறுவடை இரண்டு விதமான முறையில் செய்யலாம். ஒன்று செடியில் உள்ள இலை, பூ, காய், பழங்களை உருவி எடுத்து விட்டு, பிறகு வேருடன் செடியை பிடுங்கலாம். மற்றொரு முறை அப்படியே செடியை வேருடன் பிடுங்கலாம். வேரின் வளர்ச்சி, சைஸ் தடுமனை பொருத்து தரம் பிரித்து உலர வைத்து விற்பனை செய்ய வேண்டும். அத்தனையும் காசாக மாறக்கூடிய மூலிகையை நாமும் பிறரும் கூட்டாக சாகுபடி செய்து மத்திய, மாநில அரசுகளின் மானியம் பெற்று, 5 மாதங்களில் இரண்டு லட்சத்திற்கு அதிகமாக வருமானம் பெறலாம்.

தகவல் : அக்ரி சு.சந்திர சேகரன், வேளாண் ஆலோசகர், அருப்புக்கோட்டை, 94435 70289.

Spread the love