விருதுநகர், மே 13
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர்கள் முனைவர் வேணுதேவன், முனைவர் ராம்குமார், முனைவர் அருண்குமார் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் கூறுகையில் சிறுதானிய பயிர்களில் அதிக அளவு புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்து இருக்கும். மேலும் குறைந்த அளவு நீரினை கொண்டு சாகுபடி செய்யலாம். எ.டி.எல் 1 சாமை 85-90 நாட்கள் வளரும் ஒரு சிறுதானிய பயிர். இது மானாவாரி நிலத்திற்கு ஏற்ற இரகம். வறட்சியை தாங்கி வளரும் தன்மை கொண்டது. ஒரே நேரத்தில் தானியங்கள் முதிர்வு அடைவதால் இயந்திர அறுவடைக்கு உகந்தது. ஒரு எக்டருக்கு 15 குவிண்டால் வரை மகசூல் கிடைக்கும். சாமை சாகுபடி செய்ய வரிசை நடவுக்கு ஒரு எக்டருக்கு 10 கிலோ விதையை 25க்கு 10 செ.மீ இடைவெளியில் விதைக்க வேண்டும். கை விதைப்பு மூலம் பரவலாக தூவ ஒரு எக்டருக்கு 12.5 கிலோ விதைகள் தேவைப்படும். விதைப்பதற்கு முன் ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திரம் அல்லது கார்பெண்டசிமுடன் விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும். வயலில் ஒரு எக்டருக்கு 12.5 டன் தொழு உரமும் தழைச்சத்து 44 கிலோ மற்றும் மணிச்சத்து 22 கிலோ போதுமானது. விதைத்த 15வது நாளில் ஒரு களையும் 40வது நாள் ஒரு களையும் எடுக்க வேண்டும். பூச்சி மற்றும் நோய் தாக்குதலை தாங்கி வளருவதால் செலவு குறையும். எனவே விவசாயிகள் சாமை எ.டி.எல் 1 இரகத்தினை பயிரிட்டு அதிக மகசூலை பெற வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.