May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வளம் தரும் புதிய தனியார் வேளாண் விரிவாக்க முயற்சிகள்

கடந்த சில ஆண்டுகளாக நமது நாட்டின் விரிவாக்க தளத்தில் பல தனியார் பெருநிறுவனங்களும் சிறு மற்றும் குறு விவசாயிகள் வளம் பெற பல தனியார் விரிவாக்க முயற்சிகளில் ஈடுபட்டு அவர்களின் உற்பத்தி, உற்பத்தித் திறன் பெருக்கத்திற்கு பெரிதும் துணை புரிந்து வருகிறது. இத்தகைய நிறுவனங்களில் ஒன்றான பேயர் கிராப் சயின்ஸ் லிமிடெட் (Bayer Crop Science) நிறுவனம் நமது நாட்டில் கடந்த 125 ஆண்டுகளாக வேளாண் துறையில் தனது சேவைகளை வழங்கி வருகிறது. கடந்த 1896ஆம் ஆண்டு இந்தியாவில் கால் பதித்த இந்த ஜெர்மனிய நிறுவனம் 1963ம் ஆண்டு முதல் பேயர் (இந்தியா) லிமிடெட் என்ற பெயரிலும், தற்போது பேயர் கிராப் சயின்ஸ் லிமிடெட் என்ற பெயரிலும் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக அதிகளவில் பயிர் பாதுகாப்பு பணிகளில் தனது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கி வரும் இந்த நிறுவனம் தரமான விதைகள் தயாரிப்புகளிலும் முக்கிய பங்கு வகித்து வருகிறது.

புதிய விரிவாக்க சேவைகள்
: கடந்த சில ஆண்டுகளாக கணினி மற்றும் இணையதளம் வாயிலாக நமது நாட்டின் விவசாயிகளுக்கு ‘டிஜிட்டல் ஃபார்மிங்’ வாயிலாக விவசாயிகள் தங்களின் நிலத்தின் வளங்களுக்கு ஏற்ப சரியான இடுபொருட்களை வழங்கி அதிகளவு வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் பெற பெரிதும் உதவி வருகிறது. தற்போது நமது நாட்டில் இரண்டு கோடி விவசாயிகளை இணைத்து செயல்பட்டு வரும் இந்நிறுவனம் இண்டர்நேஷனல் பைனான்ஸ் கார்ப்பரேசன் மற்றும் சில நிறுவனங்களுடன் இணைந்து கடந்த 2018 ஆண்டு முதல் சிறிய விவசாயிகளை கிராமப்புற தொழில் முனைவோராக மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த புதிய செயல் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு தேவையான விதைகள், பயிர் பாதுகாப்பு பயிருக்கு வளர்ச்சி பருவத்திற்கு ஏற்ப தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள், நீர், நிர்வாகம், மண்வள மேலாண்மை மற்றும் நிதி சார்ந்த மேலாண்மை பணிகளை மேற்கொள்ள உதவு பெட்டர் லைஃப் ஃபார்மிங் சென்டர்களை உருவாக்கி நமது நாட்டில் ஒன்பது மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது.

மேலும் புதியதாக பேயர் லேர்னிங் சென்டர் என்று விவசாயிகளுக்கு உதவவும், அவர்களின் நடைமுறை பிரச்சனைகளுக்கு உரிய தீர்வுகள் தரவும் கடந்த 2020 ஆண்டு சோதனை அடிப்படையில் மையங்கள் துவக்கப்பட்டு தற்போது 14 லேர்னிங் சென்டர்கள் செயல்பட்டு வருகிறது. இந்த புதிய வசதி வாயிலாக விவசாயிகளுக்கு அவர்கள் பயிரிடும் பயிர்கள் குறித்த முழு அளவிலான தொழில்நுட்பங்கள் மற்றும் நடைமுறை வேளாண் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை கோவிட் 19 காலகட்டத்திலும் விவசாயிகளுக்கு ஆடியோ மற்றும் வீடியோ கலந்தாய்வுகள், எஸ்.எம்.எஸ். வாயிலாக வழங்கப்பட்டு, வேளாண் பணிகள் தடைபடாமல் சிறந்த முறையில் தொடர விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது தவிர தற்போது விவசாயிகளை இணைத்து ஃபுட் செயின் பார்ட்னர் ஷிப் என்ற திட்டத்தின் கீழ் வேளாண் விளை பொருட்களை மதிப்பு கூட்டவும், பதப்படுத்தவும் அவற்றை சில்லறை வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களை இணைத்து நல்ல தரத்திலான வேளாண் விளை பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. சுமார் 80,000 விவசாயிகளை இணைத்து 16 வகையான பயிர்களை உள்ளடக்கி சுமார் 3,65,000 ஏக்கர் நிலங்களில் சுமார் 73 ஃபுட் செயின் பார்ட்னர் ஷிப் வாயிலாக நடைமுறைப்படுத்தப்படும் இப்புதிய விரிவாக்க தனியார் முயற்சிகள் நமது நாட்டில் பல லட்சம் சிறு மற்றும் குறு விவசாயிகள் பொருளாதார முன்னேற்றம் பெற பெரிதும் உதவி வருகிறது.

கட்டுரை: முனைவர் தி.ராஜ் பிரவின், இணைப்பேராசிரியர் (வேளாண் விரிவாக்கத்துறை) மற்றும் ஒருங்கிணைப்பாளர், விவசாயிகளுக்கான வேளாண் தொழில்நுட்ப தகவல் மையம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

Spread the love