சென்னை, ஏப்.26
தென்மாவட்டங்களை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சியால், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், நாளை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : தமிழக தென்மாவட்ட கடலோர பகுதி வரை நீடித்துள்ள வளிமண்டல சுழற்சியால், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இன்று முதல் இரண்டு நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள், உள்மாவட்டங்கள், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளது. மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவும். சென்னையில் அதிகபட்சம், 36 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும். கடலோர மாவட்டங்களில் காற்றின் இயல்பான வெப்பநிலை, 5 டிகிரி செல்ஷியஸ் வரை கூடுதலாக பதிவாகும்.