புது தில்லி, மே 13
வாகன பேட்டரிகள் தயாரிப்புக்கு, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், ரூ.18,100 கோடி ஒதுக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து விரிவான செய்தியாவது: நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாக்கவும், காற்று மாசை குறைக்கவும், பெட்ரோல், டீசலால் இயக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இதன் ஒரு நடவடிக்கையாக பேட்டரிகளால் இயக்கப்படும், மின்சார வாகனங்களை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், வாகன பேட்டரிகள் தயாரிப்புக்கு, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், ரூ.18,100 கோடி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இது குறித்து, தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளதாவது:
வாகன பேட்டரிகள், 50 ஜிகா வாட்ஸ் சக்தி அடங்கியதாக இருக்கும். இதன் தயாரிப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கு, இந்த தொகை ஒதுக்கப்பட உள்ளது.
இதனால், வாகன பேட்டரி தயாரிப்பில், சர்வதேச அளவில் இந்தியா முன்னிலை பெறும் என்றார். இதனால், பேட்டரிகளை அதிகளவில் பயன்படுத்தும் மின்னணு பொருட்கள், மின்சார வாகனங்கள், சூரிய மின் தகடுகள் ஆகியவற்றின் உற்பத்தியும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.