June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வாத்துக்களை பாதிக்கும் டிரகியோ பிலஸ் மற்றும் எகினோஸ்டோம் வகை தட்டைப்புழுக்கள்

ஆசியா கண்டத்தின் வேளாண்மை பொருளாதாரத்தில் வாத்து வளர்க்கும் தொழிலானது ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. உலகின் மொத்த வாத்து இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியில் 82.6 சதவிகிதம் ஆசிய கண்டத்தில் மட்டும் உற்பத்தி செய்யப்படுகின்றது. அதிக செலவில்லாமல் ஏழை மக்களும் இந்த வாத்துக்களை வளர்க்க முடியும். வாத்துக்கள் வயல்வெளிகளில் காணப்படும் பாசிகள், பச்சை பயறு வகைகள், களைச்செடிகள், நத்தைகள், மண்புழுக்கள், பல வகை பூச்சிகள் மற்றும் மீன்கள் போன்றவற்றை உண்டு வளர்வதால் மேய்ச்சல் முறையில் தீவனச்செலவு அதிகம் இருப்பதில்லை. கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தில் வாத்து வளர்ப்புத்தொழில் முக்கிய பங்காற்றுகிறது.

தட்டைப்புழு ஒட்டுண்ணிகள் நீர்ப்பறவைகளான வாத்துக்களை பெரிதும் பாதிக்கின்றன. இவற்றில் வீடு, பண்ணைகளில் வளர்க்கப்படும் வாத்துக்களான நாட்டு வாத்துக்கள், காக்கி காம்பெல், வெள்ளை பெக்கின் இன வாத்துக்கள் மற்றும் காட்டு வாத்துக்களும் அடங்கும். தட்டைப்புழுக்களில் டிரகியோபிலஸ் மற்றும் எகினோஸ்டோம் வகை புழுக்கள் மிக முக்கியமானவைகள் ஆகும். டிரகியோபிலஸ் புழுக்கள் வாத்துக்களின் தொண்டை மற்றும் மூச்சுக்குழல் பகுதியில் வசிக்கின்றன. இவை வாத்துக்களுக்கு சுவாசிப்பதில் சிரமத்தையும், மூச்சுத்திணறல் மற்றும் இறப்பையும் ஏற்படுத்துகின்றன. எகினோஸ்டோம் புழுக்கள் வாத்துக்களின் குடல் பகுதியில் தாக்கி குடற்புண், கழிச்சல் மற்றும் சில நேரங்களில்; இறப்பும் காணப்படும்.

தட்டைப்புழுக்களின் தாக்கம்
நீர்நிலைகளில் காணப்படும் நத்தைகள் தட்டைப்புழுக்களின் வளர்ச்சிக்கு இடைநிலை உயிரிகளாக இருக்கின்றன. நீர்நிலைகளில் காணப்படும் நத்தைகள் மற்றும் மீன்களை வாத்துக்கள் உட்கொள்வதால் இப்புழுக்கள் பரவுகின்றன. லிம்னியா, இன்டோபிளனார்பிஸ், ஸ்டினோதைரா நத்தைகள், பைலா வகை நத்தைகள் மற்றும் சில மீன்களும் தட்டைப்புழுக்களின் தாக்கத்திற்கு முக்கிய காரணிகளாகும். எகினோஸ்டோம் புழுக்கள் மனிதர்களுக்கும் பரவக்கூடியவை. புழு நிலைகள் பரவிய நத்தைகளை அல்லது மீன்களை முழுவதுமாக சமைக்காமல் மனிதர்கள் உட்கொள்ளும்போது இந்த புழுக்கள் பரவுகின்றன. மனிதர்களில் வயிற்று வலி மற்றும் சில நேரங்களில் கழிச்சல் தவிர அதிக பாதிப்பு ஏற்படுவதில்லை.

தட்டைப்புழு தாக்கத்தின் அறிகுறிகள்

· டிரகியோபிலஸ் தட்டைப்புழுக்களினால் வாத்துக்களில் மூச்சுக்குழல் அழற்சி மற்றும் அடைப்பு ஏற்பட்டு, சுவாசிப்பதில் ஏற்படும் சிரமம் காரணமாகவே இறப்பு ஏற்படுகிறது.
· வாத்து வளர்க்கும் பண்ணையில்;, வளர்ச்சியடைந்த முட்டையிடும் வாத்துக்கள் இறக்கும்
· சில வாத்துக்கள் ஒரு விதமாக வாயை திறப்பதாகவும் அமையும். வாத்துக்கள் சோர்வாக காணப்படும்.
· வாத்துக்களின் இறப்பறி சோதனையில் வாத்துக்களின் தொண்டையிலும், மேல் மூச்சுக்குழல் பகுதியிலும் சிவப்பு நிற தட்டையான புழுக்கள் காணப்படும்.
· நுண்ணோக்கி பரிசோதனையில் மூச்சுக்குழலின் உட்புற அடுக்கின் சுரப்பு நீரில்; டிரகியோபிலஸ் புழுக்களின் முட்டைகள் காணப்படும்.
· எகினோஸ்டோம் புழுக்கள் வாத்துக்களின் குடல் பகுதியில் தாக்கி குடற்புண், குடல் அழற்சி, வாத்துக்களில் இறப்பையும் ஏற்படுத்துகின்றன. இப்புழுக்களின் வளர்ச்சிக்கும் நத்தைகள் இடைநிலை உயிரிகளாக இருக்கின்றன. எகினோஸ்டோம் புழுக்களால் பாதிக்கப்பட்ட பறவைகளில் கழிச்சல் ஏற்படும்.

தடுப்பு முறைகள்
· வாத்து வளர்ப்போர் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி உரிய நேரத்தில் குடற்புழு நீக்கம் செய்தால் வாத்துக்களில் இறப்பினை தவிர்த்து, ஒட்டுண்ணிகளின் பாதிப்பின்றி இலாபகரமாக தொழில் செய்ய இயலும்.
· பிராசிகுவான்டல் மற்றும்; பென்பன்டசால் மருந்துகள் கொண்டு வாத்துக்களில் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.
· நத்தைகள் அதிகம் உள்ள இடங்களிலோ அல்லது மழைக்காலங்களில் அதிக நேரம் வாத்துக்களை மேய்ச்சலுக்கு விடக்கூடாது.
· ஒட்டுண்ணி புழுக்களின் தாக்கத்தை தடுக்க நன்கு சமைக்கப்பட்ட உணவையே மனிதர்கள் உட்கொள்ள வேண்டும்.

டிரகியோபிலஸ் புழுக்கள்

எகினோஸ்டோம் புழுக்கள்

மேலும் விவரங்களுக்கு, முனைவர் அ.லட்சுமிகாந்தன், மருத்துவர் ம.க.விஜயசாரதி, உதவிப் பேராசிரியர்கள், முனைவர் ர.வேலுசாமி, உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை ஒட்டுண்ணியியல் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு, தஞ்சாவூர். தொடர்புக்கு : 04372-234012-4225.

Spread the love