October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வாழைக்கான விலை முன்னறிவிப்பு

கோவை, அக்.13

இந்தியாவில், வாழை அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு பெரும்பாலும் உள்நாட்டு சந்தைகளிலே விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் முக்கியமாக கேவென்டிஸ் வகை வாழை பயிரிடப்பட்டாலும், பல்வேறு விதமான வாழை வகைகள் காணப்படுகிறது. இந்தியாவில், வடகிழக்கு மற்றும் தெற்கு மாநிலங்களில் வாழை அதிகளவில் பயிரிடப்படுகிறது.

வாழை சாகுபடியில் தமிழ்நாடு அதிக பரப்பளவு மற்றும் உற்பத்தியை கொண்டு முதலிடத்திலும், அடுத்தபடியாக மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவும் உள்ளது, ஆனால் உற்பத்தி திறனில் மஹாராஷ்டிரா முதலிடத்திலும் அடுத்தபடியாக தமிழ்நாடு மற்றும் மத்தியபிரதேசமும் உள்ளது.
தமிழ் நாட்டில் ஈரோடு, கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வாழை அதிகளவில் பயிரிடப்படுகிறது. கோவை, ஈரோடு மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் வாழை பயிரிடப்படும் நேந்திரன் வாழையானது கேரள சந்தைகளின் தேவையை பூர்த்தி செய்கிறது. கேரள மக்களின் உணவு மற்றும் சீவல் தயாரிப்பில் நேந்திரன் வாழையானது முக்கிய பங்கு வகிக்கிறது. திருச்சி சந்தைக்கு வாழை வரத்து லால்குடி, புதுக்கோட்டை, முசிறி, கடலூர் மற்றும் தேனி ஆகிய பகுதிகளிலிருந்து வருகிறது. தற்போது, கோயம்புத்தூர் சந்தைக்கு புதுக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளிலிருந்து பூவன் வரத்தும், சத்தியமங்கலம், கோபி செட்டிப்பாளையம் ஆகிய பகுதிகளிலிருந்து கற்பூரவள்ளி வரத்தும் வருகிறது. நேந்திரன் வரத்தானது மேட்டுப்பாளையம் மற்றும் கேரளாவிலிருந்து் வருகிறது.

வர்த்தக மூலங்களின் படி, பண்டிகை காலங்கள் காரணமாக வரும் மாதங்களில் வாழையின் தேவை அதிகரிக்கக்கூடும். இச்சூழலில், விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், வேளாண் மற்றும் ஊரகமேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம் கடந்த 18 ஆண்டுகளாக கோயம்புத்தூர் சந்தையில் நிலவிய பூவன், கற்பூரவள்ளி மற்றும் நேந்திரன் விலை மற்றும் சந்தை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் முடிவின் அடிப்படையில் அக்டோபர் முதல் டிசம்பர் 2021 மாதங்களில் பூவன் வாழையின் சராசரி பண்ணை விலை கிலோவிற்கு ரூ.15, கற்பூரவள்ளி ரூ. 25 மற்றும் நேந்திரன் வாழையின் பண்ணை விலை கிலோவிற்கு ரூ.32 வரை இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் விவசாயிகள் தகுந்த விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு, உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003, தொலைபேசி : 0422-2431405 மற்றும் தொழில் நுட்ப விவரங்களுக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர்,

பழப்பயிர்கள் துறை, தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் – 641 003, தொலைபேசி எண் : 0422-6611269 தொடர்பு கொள்ளலாம்.

Spread the love