January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வாழையில் இலைக்கருகல் நோய்

கோவை, மே 12

வாழையில் இலைக்கருகல் நோய் ஏற்பட்டு, வாழைக் கன்றுகள் வாடி வருகின்றன. போதுமான அடி உரம் இல்லாததும், பாஸ்பரஸ் சத்து குறைபாடும் இதற்குக் காரணம் என, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காரமடை வெள்ளியங்காடு சாலையில், கே.புங்கம்பாளையம் அருகே, ஒரு தோட்டத்தில், வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு, வாழையின் அடிப்பகுதி இலைகள் காய்ந்து வருகின்றன. தொடர்ந்து, இலை காய்ந்தால், மரம் பாதிக்கப்பட்டு, மகசூல் குறையும். எனவே, இது குறித்து தோட்டக்கலைத் துறையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இது குறித்து காரமடை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சுரேஷ் கூறுகையில், பொதுவாக சத்து குறைபாடு காரணமாக, வாழை இலைகள் காய்ந்து வருகின்றன. சம்பந்தப்பட்ட விவசாயி, அந்த நிலத்தில், தொடர்ச்சியாக வாழை சாகுபடி செய்து வந்திருக்க வேண்டும். இதனால், நிலத்தில் பாஸ்பரஸ் சத்து குறைபாடு உருவாகியுள்ளது. இதன் காரணமாகவே, வாழை இலைகள் காய்ந்து வருகின்றன. இதற்கு மண் வழியாக தேவையான உரம் கொடுப்பதைவிட, நீரில் கரையக்கூடிய பாஸ்பரஸை, வாழை இலைகளின் மீது தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், இலைகள் காய்வது குறையும். மேலும், அடி உரம் போட்டிருக்க வேண்டும். இலைகளில் பச்சைத் தன்மை இருந்தால்தான், ஒளிச்சேர்க்கை வாயிலாக, தாரில் உள்ள வாழைக்காய் நன்கு வளரும். இலையில் பச்சையம் குறைவாக இருந்தால், மகசூல் குறையும். எனவே, இதுபோன்ற குறைபாடுகள் காணப்பட்டால், வாழை இலைகள் மீது, பாஸ்பரஸ் கரைசலை தெளிக்க வேண்டும். அடி உரம் போடுவதை விவசாயிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Spread the love