வாழை ஓர் பழமையான, பிரபலமான முக்கிய பழப்பயிராகும். “சொர்க்கத்தின் ஆப்பிள்’ என்று வாழையை அழைக்கபடுகிறது. வாழையை பரவலாக பழங்களாகவும் மற்றும் அதன் தண்டுப்பகுதி காய்கறிகளாகவும் பயன்படுத்தப்படுகிறது. வாழை உற்பத்தி மற்றும் பரப்பளவில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு, கர்நாடக மற்றும் மகாராஷ்டிரவில் அதிகளவில் சாகுபடி செய்யபடுகிறது. தமிழ்நாட்டில் விழுப்புரம், கடலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், கரூர், ஈரோடு மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வாழை பரவலாக பயிரிடப்படுகிறது. வாழையில் தற்போது மஞ்சள் இழைப்புள்ளி நோயின் தாக்கம் தீவிரமாக காணப்படுகிறது. இதனால் வாழை விவசாயிகளின் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆதலால் இக்கட்டுரையில் இலைப்புள்ளி நோயின் அறிகுறிகள் மற்றும் மேலாண்மை முறைகள் பற்றி காண்போம்.
நோயின் அறிகுறிகள்:
● முதலில் வாழை இலையின் மேற்புறத்தில் சிறு, சிறு மஞ்சள் நிறப்புள்ளிகள் தோன்றும்.
● இப்புள்ளிகள் பின்னர் நீளவாக்கில் விரைந்து சாம்பல் நிற மையத்துடன் கூடிய பழுப்பு நிறமாக மாறும்.
● இப்புள்ளிகள் இலை முழுவதும் பரவி இலைகள் காய்ந்து விடுகிறது.
● விரைந்து இலை காய்தல் மற்றும் இலை உதிர்தல் இந்நோயின் முக்கிய அறிகுறியாகும்.
● நோய்த்தாக்கம் அதிகம் இருக்கும் மரங்களின் குலைகள் சிறுத்தும், கோணலாகவும் தென்படும். காய்கள் பிஞ்சிலேயே பழுத்து விடுகிறது.
நோய்க்காரணி மற்றும் ஏற்ற காலநிலைகள்:
● மைக்கோஸ்போரைல்லா மீயூசிக்கோலா என்ற பூஞ்சையினால் இந்நோய் தோற்றுவிக்கப்படுகிறது.
● 27 முதல் 35℃ வெப்பநிலை மற்றும் 85-90 சதம் காற்றின் ஈரப்பதம் ஏற்ற காலநிலையாகும்.
பரவும் விதம்:
● காற்று, நீர் மற்றும் நோய் தாக்கிய இலைகள் மூலம் இந்நோய் பரவுகிறது.
● வளம் குன்றிய மண், வடிகால் வசதியில்லா நிலம்,நெருக்கமான நடவு மற்றும் நிழற்பாங்கான பகுதிகள் இந்நோயின் தாக்கத்தை தீவிரப்படுத்துகிறது.
மேலாண்மை முறைகள்:
உழவியல் முறைகள்:
● நோய் தாக்கப்பட்ட இலைகளை அகற்றி எரித்து விட வேண்டும்.
● அகன்ற முறையில் நடவு செய்ய வேண்டும்.
● வளமான மற்றும் நல்ல வடிகால் வசதி கொண்ட நிலத்தில் வாழையை பயிரிட வேண்டும்.
உயிரியல் முறை:
● சுடோமோனஸ் புளுரசன்ஸ் மற்றும் பேசில்லஸ் என்ற உயிர் பூஞ்சனக்கொல்லிகளை 15 கிராம்/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து நோயினை கட்டுப்படுத்தலாம்.
இரசாயன முறைகள்:
● கார்பன்டசிம் மற்றும் மங்கோசெப் @ 2 கிராம்/லிட்டர் அல்லது புரோப்பிகோனசோல் மற்றும் அசோக்ஸிஸ்ட்ரோபின் @2மி.லி/லிட்டர் என்ற அளவில் வாழையின் இலையில் தெளிக்க வேண்டும்.
விவரங்களுக்கு : இரா.ஜெயசங்கர்மூர்த்தி, (முதுகலை வேளாண்மை மாணவர்), கோழிப்பட்டு, 89404 75344, agrijay102@gmail.com, மு.சக்திவேல், (வேளாண் தொழில்நுட்பவியல் மாணவர்), அகஸ்தியன்பள்ளி, 63856 37492, sakthiau2001@gmail.com.