August 14, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வாழையில் முடிக்கொத்து நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

இந்தியாவில் இந்நோய் 1949-ம் ஆண்டில் கேரளா மாநிலத்தில் தோன்றியது. இது பரவி தற்போது தமிழ்நாடு, ஆந்திராபிரதேசம், கர்நாடகா, ஒரிசா, பீகார், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் பரவலாகக் காணப்படுகிறது. வாழையில் முடிக்கொத்து நோயும் அதன் மேலாண்மை முறைகள் பற்றியும் காண்போம்.

நோய்க்காரணி
இந்நோய் வாழை முடிக்கொத்து நோய் நச்சுயிரி அல்லது வாழை நச்சுயிரி அல்லது மூசா நச்சுயிரி –1 என்னும் நச்சுயிரினால் தோன்றுகிறது.

நோயின் அறிகுறிகள்
நோய்த் தாக்கிய கன்றுகளை நாடும் போது, அவை குட்டையான, குறுகிய இலைகளைத் தோற்றுவிக்கும். இலைகள் ஓரே இடத்திலிருந்து தோன்றியது போல், ஒரே குத்தாகத் தோன்றுவதோடு, வெளிறியும், தேமல் நோய் அறிகுறிகளுடனும் காணப்படும். இவ்வாறான இலைகள் எளிதில் ஒடிந்து விடக் கூடியவைகளாகவும். பல கரும் பச்சை நிறப்புள்ளிகள் அல்லது படைகளைக் கொண்டும் தென்படும். இலைகள் விளிம்புகளிலிருந்து மேல்நோக்கி சுருண்டிருக்கும். இக்கன்றுகள் 2 அல்லது 3 அடி உயரத்துக்கு மேல் வளர்வதில்லை. அவை தார்களைத் தோற்றுவிப்பதுமில்லை. நோய்க் காரணியானது கன்றுகளின் எல்லாப் பாகங்களும் ஊடுருவிச் செல்லக்கூடிய தன்மையைக் கொண்டிருப்பதால், கன்றுகளிலிருந்து இலைகள் தோன்ற ஆரம்பித்த உடனேயே, அறிகுறிகளும் தென்படும்.

வயலில் நிற்கும் நோய்த் தாக்காத மரங்களை எந்த வளர்ச்சிப் பருவத்திலும் இந்நோய் தாக்கக்கூடியது. புதிதாகத் தாக்கப்பட்ட மரங்களின் குருத்து இலைகள், சரிவர வெளிவரும் முன்னரே விரியத் துவங்கும். இலைகளில் நரம்புகளுக்கு இணையாக கரும் பச்சை நிறக் கோடுகள் அல்லது புள்ளிகள் தோன்றும். இது போன்ற கீற்றுக்கள் அல்லது புள்ளிகள் நடுநரம்பிலும், இலைக் காம்பிலும் தென்படும். புதிதாகத் தோன்றும் இலைகளில் இது போன்ற அறிகுறிகள் அதிகமாகக் காணப்படுவதுடன், இலைகளும் சிறுத்து வெளிரி காணப்படும். இதுபோன்று தொடர்ந்து சில இலைகள் வரும் போது அவை ஒரே குத்தாகத் தென்படுவதால், இது முடிக்கொத்து நோய் எனப்படுகிறது. இந்த இலைகள் இயல்பான இலைகளை விட கெட்டியாகவும், விறைப்பாகவும் காணப்படும். தாக்கப்பட்ட மரங்களிலுள்ள இலைகள் வாடிப் போவதுதில்லை, மரங்கள் மடிந்துப் போவதுமில்லை. அவற்றிலிருந்து தார்கள் வருவதில்லை. தார்கள் வந்தாலும் அவை காலத்திற்கு முன்னதாகவே தண்டுப் பாகத்தைப் பிளந்துக் கொண்டு, முழுமையற்ற நிலையில் வெளிவரும், சில வேளைகளில் கிழங்குப் பாகமும், வேர்களும் அழுகிக் காணப்படும்.

இலைகள் கொத்தாகத் தென்படல்

நோய்ப் பரவும் விதமும் பரவுவதற்கு ஏற்ற காலநிலைகளும்
இந்நோயைத் தோற்றுவிக்கக் கூடிய நச்சுயிரியானது பென்டலோனியா நைக்ரோநிர்வோசா என்னும் வாழை அசுவிணியால் பரப்பப்படுகிறது. இந்த அசுவிணியானது நச்சுயிரிகளை அவற்றினுள் எடுத்துக் கொள்ள சுமார் 17 மணி நேரம் நோய்த் தாக்கிய மரத்திலிருந்து சாற்றை உறிஞ்ச வேண்டும். இவ்வாறு சாறு உறிஞ்சிய 2 – 48 மணி நேரத்திற்குப் பின்னர் இந்த அசுவிணிகள் நோயைப் பரப்பக் கூடியத் திறனைப் பெறுகின்றன. இந்த அசுவிணி பறந்துச் சென்று நோயை அதிக தூரத்திற்குப் பரப்பக் கூடியது.

பென்டலோனியா நைக்ரோநிர்வோசா

நோய்க்கட்டுப்பாடு
உழவியல் முறைகள் :
நோய்த் தாக்கிய மரங்களை உடனுக்குடன் பக்கக் கன்றுகளுடன் பிடுங்கி எரித்து விட வேண்டும். நோய் காணப்படாத பகுதிகளிலிருந்து நாற்றுக்களைத் தேர்ந்தெடுத்து நடவுக்குப் பயன்படுத்த வேண்டும்.

மருந்து சிகிச்சை:
நோயைப் பரப்பக் கூடிய அசுவிணியைக் கட்டுப்படுத்த மீத்தைல் டெமட்டான் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு மில்லி மருந்து என்ற விகிதத்தில் கலந்து மரத்தின் அடிப்பாகத்திலிருந்து, குருத்துப் பாகம் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும். தொடர்ந்து15 – 20 நாட்களுக்கு ஒரு முறையாக, பலமுறை மருந்துத் தெளிக்க வேண்டும்.

கட்டுரை ஆசிரியர்கள் : கு.விக்னேஷ், முனைவர் பட்டப்படிப்பு மாணவர், தொடர்பு எண்: 82488 33079, மின்னஞ்சல் : lakshmikumar5472@gmail.com, கா. கருப்புதுரை, சுனில் சூர்யா, முதுநிலை வேளாண் மாணவர்கள் – தாவர நோயியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

Spread the love