கரூர், ஏப்.23
கரோனா வைரஸ் பரவலை தடுக்க, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், வாழை இலைக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
தமிழகத்தில் பங்குனி முதல் ஆடி மாதங்களில் கோவில் விழாக்கள் களை கட்டும். ஆடி மாதத்தை தவிர்த்து, திருமணம் உள்ளிட்ட சுப விசேஷங்களும் அதிகளவில் நடக்கும். ஆனால்,
கடந்தாண்டை போல கரோனா வைரஸ் பரவலை தடுக்க, கட்டுப்பாடுகள் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணங்களில், 100 பேர் மட்டும் பங்கேற்க வேண்டும். கோவில் திருவிழா, துக்க
காரியங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், வாழை இலைக்கு தேவை குறைந்து, விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
கரூர் மாவட்டத்தில், காவிரி மற்றும் அமராவதி ஆற்றுப்பகுதிகளில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் வரை பெய்த மழை காரணமாக, வாழை இலை நன்கு விளைச்சல்
அடைந்துள்ளது. ஆனால், போதிய தேவை மற்றும் விலை இல்லாததால் விவசாயிகள் வாழை இலை அறுவடையை, தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, விவசாயிகள் கூறுகையில், கரோனா வைரஸ் பரவலை தடுக்க கட்டுப்பாடுகள், இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், வாழை இலைக்கு திடீரென தேவை குறைந்துள்ளது.
இதனால், கரூரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு, வாழை இலையை அனுப்ப முடியவில்லை. கடந்த மாதம் வரை, வாழை இலை கட்டு, ரூ.1,500 வரை விற்பனையானது. தற்போது, ரூ.750 வரை
தான் விலை போகிறது. இதனால், வாழை இலை அறுவடை கூலி, கட்டும் கூலிக்கு கூட, வருமானம் இல்லை. வாழை மரங்களில் அறுவடை செய்ய முடியாமல், இலை தேங்கியுள்ளது என
அவர்கள் கூறினர்.