August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வாழை இலையில் நிலையான வருவாய்க்கு திட்டமிட்ட பராமரிப்பு அவசியம்

கோவை, ஏப்.26

வாழை பயிரிடும் விவசாயிகள், இலை வாயிலாகவும் வருவாய் ஈட்டலாம் என தோட்டக்கலை துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் தென்னையில் ஊடுபயிராக வாழை அதிகளவு பயிரிடப்படுகிறது. பெரும்பாலும் நேந்திரன், செவ்வாழை, பூவன் என விளைச்சலை குறி வைத்தே இந்த சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், வாழை இலை அறுவடை செய்தும் கணிசமான வருவாய் ஈட்டலாம் என தோட்டக்கலை துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து உதவி தோட்டக்கலை அலுவலர் பிரபு கூறுகையில், உணவுகளை பாலித்தீன் தாளில் வைத்து பரிமாறுவதற்கும், பார்சல் செய்வதற்கும் அரசு தடை விதித்துள்ளது. இதனால், வாழை இலையின் தேவை அதிகரித்துள்ளது. இதனால், ஆண்டு முழுக்க இலைக்கான தேவை நிலையாக உள்ளது. முகூர்த்த நாட்களில் தேவையும், விலையும் அதிகரிக்கிறது. விவசாயிகள் இதை கருத்தில் கொண்டு, இலைக்காகவும் வாழை பயிரிடலாம். இலைக்காகப் பயிரிடப்படும் ரகங்களில் பூவன் சிறந்தது. அடுத்தபடியாக, கற்பூரவல்லி மற்றும் மொந்தன் ரகங்களையும் பயிரிடலாம். இலைக்காக வாழை சாகுபடியில், காற்று வேகமாக வீசும் போது, இலைகள் கிழிந்து பாதிப்பு ஏற்படும். இதைத் தவிர்க்க, முன்பே திட்டமிட்டு, விளைநிலத்தை சுற்றிலும் அகத்தி, கிளரிசிடியா மரங்களை உள் வரிசையிலும், சவுக்கு மரத்தை வெளி வரிசையிலும் நடவு செய்து காற்றை தடுக்கலாம். இலைகள் நன்றாக விரிவடைந்து வளர சூரிய ஒளி முக்கியம். எனவே வாழையை நெருக்கமாக நடவு செய்யாமல், தேவையான இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும். இலைகள் நன்கு செழித்து வளர, தழைச்சத்தும், கால்சியம் சத்தும் முக்கியம். பொதுவாக, 80:10:10 என்ற விகிதத்தில் முறையே தழை, மணி, சாம்பல் சத்துக்கள் கொடுத்தால், இலைப்பெருக்கம் நன்றாக இருக்கும். குறிப்பாக, இலைகளில் பூச்சி தாக்குதல் ஏற்படாமல் பராமரிப்பது அவசியம். இயற்கை பொருட்களை கொண்டு தோட்டத்திலேயே தயாரிக்கும் பூச்சி விரட்டிகள் இதற்கு கைகொடுக்கும். பராமரிப்பு செலவுகளை திட்டமிட்டு குறைத்துக் கொண்டு, பராமரிப்பு பணிகளில் அதிக கவனம் செலுத்தினால், குறைந்த காலத்தில் வாழை இலையில் நல்ல வருவாய் ஈட்ட முடியும் என அவர் தெரிவித்தார்.

Spread the love