June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விதைகளில் பிறரக சோதனை செய்வீர்! கலப்பில்லா விதை பெறுவீர்!

திருநெல்வேலி, ஜூன் 13

தரமான விதை உற்பத்தியில் வயலில் கலவன்களை உரிய நேரத்தில் உரிய முறையில் நீக்கினால் மட்டும் விதைத் தரத்தைப் பேணிக் காக்க முடியும். நமது மாவட்டத்தில் நெல் பயிரில் சான்று விதை உற்பத்தி அதிகம் செய்யப்படுவதால் வயலில் கலவன்கள் ஏற்படாமல் இருக்க கீழ்க்கண்ட நடைமுறைகளை கடைபிடிக்கலாம்.

  1. சான்று பெற்ற விதைகளை அரசு அங்கீகாரம் பெற்ற விற்பனை நிலையங்களிலிருந்து மட்டுமே வாங்கிப் பயன்படுத்துதல் வேண்டும்.
  2. அதிக அளவில் நெல் விதை வாங்கும்போது அனைத்து மூட்டைகளும் ஒரே இரகமாக உள்ளனவா எனக் கவனித்து வாங்க வேண்டும்.
  3. ஒரே பயிரில் ஒன்றுக்கு மேற்பட்ட இரகங்கள் வாங்கும் போது ஒவ்வொரு இரகத்தினையும் தனித்தனியே வைத்துப் பயன்படுத்துதல் வேண்டும்.
  4. நாற்று விடுவதற்கு தயார் செய்யும் போது இரகங்கள் கலந்துவிடாமலிருக்க வெவ்வேறு தினங்கள் மற்றும் வெவ்வேறு இடங்களில் நாற்று விட்டு நாற்று நடவின் போது வெவ்வேறு தினங்களில் நாற்றுப் பறித்தல் மற்றும் நடுதல் மேற்கொள்ள வேணடும்.
  5. நடவு முடிந்து மீதமாகும் நாற்றுகளை உடனடியாக அப்புறப்படுத்துதல் வேண்டும்.
  6. ஒவ்வொரு இரகத்தினையும் தனித்தனியே அறுவடை செய்து கதிரடித்து மற்றும் காயவைத்தல் வேண்டும்.
  7. களத்தினை நன்கு சுத்தம் செய்த பின்னரே நெல் விதைகளை உலர வைக்க வேண்டும்.
  8. நன்கு காய வைத்த விதைகளை புதிய கோணிகளில் மட்டுமே சேமித்து வைத்தல் வேண்டும்.
  9. வயல் மட்ட விதை மூட்டைகளின் மேல் இரகத்தினை தெளிவாகக் குறிப்பிடுதல் வேண்டும்.
  10. பல இரகங்கள் உள்ள நிலையில் மூட்டைகளை இரக வாரியாக தனி அறையில் வைத்தல் அவசியம்.

இவ்வாறு கடைபிடிப்பதால் நெல் விதைகளில் கலவன்கள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளலாம். மேலும் திருநெல்வேலி விதைப்பரிசோதனை ஆய்வகத்தில் நீங்கள் உற்பத்தி செய்யும் விதைகளில் பிறரக விதைகள் கலந்துள்ளனவா என்பது இரகத்தின் குணநலன்களை கருத்தில் கொண்டு பிரித்து அறியப்படுகிறது.

எனவே திருநெல்வேலி விதைப்பரிசோதனை நிலையத்தில் பிறரக பரிசோதனை செய்த விதைகளை பயன்படுத்தி தரமான விதைகளை பெற்று பயனடையுமாறு திருநெல்வேலி விதைப்பரிசோதனை அலுவலர் ஞா.ஆனந்தி ராதிகா கேட்டுக் கொண்டார்.

Spread the love