புதுக்கோட்டை, ஏப்.27
புதுக்கோட்டை மாவட்டம், வண்ணாரப்பட்டி மற்றும் செட்டியாப்பட்டி கிராமங்களில் நிலக்கடலை மற்றும் உளுந்து விதைப்பண்ணைகளின் குவியலாய்வு, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் ரா.ஜெகதீஸ்வரி மேற்கொண்டார். உளுந்து மற்றும் நிலக்கடலை விதைச் சுத்திப்பணி செய்யும் போது உடைந்த, முதிர்ச்சி அடையாத மற்றும் இதர இரக விதைகளையும் நீக்க வேண்டும் என்றும் முழுமையாக முதிர்ச்சி அடைந்த விதைகளையே தெரிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும் உளுந்து குவியலாய்வின்போது வம்பன் 11 இரகமானது 70-75 நாட்கள் வயதுடையது மற்றும் இது எக்டருக்கு சராசரியாக 900 கி.கி மகசூல் தரக்கூடியது என்றும் மற்ற உளுந்து இரகங்களை விட அதிக மகசூல் தரவல்லது. மேலும் ஒரே நேரத்தில் ஒரே சீராக முதிர்ச்சி அடையும் தன்மை கொண்டது. நோய் மற்றும் பூச்சி தாக்குதலுக்கு அதிக எதிர்ப்புத்திறன் கொண்டது எனவும் வம்பன் 11 இரகத்தின் சிறப்பியல்புகளை விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்.
நிலக்கடலை குவியலாய்வின் போது ஜிஜேஜி 32 மற்றும் விஆர்ஐ 8 இரகங்களுக்கான குணாதிசயங்களை எடுத்துரைத்தார். ஜிஜேஜி 32 இரகம் 51 சதவீதம் எண்ணெய் சத்து கொண்டது எனவும் சுமார் 120 நாட்கள் வயதுடையது. எக்டருக்கு சராசரியாக 3100 கிலோ மகசூல் தர வல்லது மற்றும் விஆர்ஐ 8 இரகமானது 105 -110 வயதுடையது. 49 சதவீதம் எண்ணெய் சத்து கொண்டது. எக்டருக்கு சராசரியாக 2700 கிலோ மகசூல் தர வல்லது. மேற்குறிப்பிட்ட நிலக்கடலை இரகமானது புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து பருவத்திற்கும் பயிரிட ஏதுவான இரகம் என எடுத்துரைத்தார்.
விவசாயம் இலாபகரமாக இருக்க வேண்டுமானால் இடுபொருள்கள் தரமானதாக இருக்க வேண்டும். இடுபொருள்களின் முதன்மையானது விதையாகும். தரமான விதை என்பது அதிகப்படியான முளைப்புத்திறன், அளவான ஈரப்பதம், பிற இரக கலப்பு இல்லாமை, புறத்தூய்மை மற்றும் இனத்தூய்மை உடையது. விவசாயிகள் சான்று பெற்ற விதைகளை பயன்படுத்தும்போது நல்ல முளைப்புத்திறனுடன் பயிர் வளர்ச்சி சீராக இருக்கும். சான்று பெற்ற விதைகளில் ஆதார நிலை விதைகளுக்கு வெள்ளை நிற சான்றட்டையும் சான்று நிலை விதைகளுக்கு நீல நிற சான்றட்டையும் பொருத்தப்பட்டிருக்கும். சான்று பெற்ற விதைகள் அரசு வேளாண்மை விரிவாக்க மையங்களிலும், உரிமம் பெற்ற தனியார் விதை விற்பளை நிலையங்களிலும் கிடைக்கும்.
எனவே விவசாயிகள் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஏற்ற சான்று பெற்ற தரமான விதை இரகங்களை பயன்படுத்தி அதிக இலாபம் பெறலாம்.