August 15, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று இயக்குநர் ஆய்வு

ஈரோடு, ஜூலை 11

தமிழ்நாடு அரசு விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று துறையின் மூலம் தரமான சான்று பெற்ற உயர் விளைச்சல் இரகங்களில் விதை உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் சில்லரை விற்பனை நிலையங்கள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர் (பொறுப்பு) ஜி.வளர்மதி, ஈரோடு மாவட்டத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு விதைச்சான்று மற்றும் விதை ஆய்வுபணிகளை ஆய்வு செய்தார்.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டாரத்தில் இயங்கிவரும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு கொள்முதல் பட்டியல், பதிவு சான்றிதழ், முளைப்பு திறன் அறிக்கை, காலாவதி நாள், இருப்பு பதிவேடு, விற்பனை பட்டியல் ஆகியவற்றை சரிபார்த்து தக்க அறிவுரைகளை வழங்கினார். அதனையடுத்து, சிவகிரியில் செயல்பட்டு வரும் ஈரோடு துல்லிய பண்ணை உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் விதைசுத்திகரிப்பு நிலையத்தினை பார்வையிட்டு விதை இருப்பு விபரம் மற்றும் விதை சுத்திப் பணிகளை ஆய்வு செய்தார். விதை சுத்திகரிப்பு நிலையத்தில் வயல்மட்ட விதைகள் பதிவேடு, விதைசுத்தி பதிவேடு, சான்றட்டை இருப்பு பதிவேடு, விதை இருப்பு பதிவேடு, சிப்பங்களின் எடை ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும் அனைத்து விதைச்சான்று நடைமுறைகளையும் தொய்வின்றி பின்பற்றி சான்று விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு தரமான சான்று பெற்ற விதைகளை மட்டுமே விநியோகம் செய்திட வேண்டுமென அறிவுரை வழங்கினார். மேலும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் ஆவுடையார்பாறை மற்றும் அய்யம்பாளையம் ஆகிய இரண்டு பஞ்சாயத்துகளில் உள்ள விவசாயிகளை தரமான விதை உற்பத்தி செய்திட சிறப்பு பயிற்சி அளித்து நெல், எள், பயறுவகை பயிர்களில் விதைப்பண்ணை அமைத்திட முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டுமெனவும், தரமான விதைகளை உரிய காலத்தில் இருப்பு வைத்து விநியோகம் செய்திடுவதை கண்காணித்தல் வேண்டுமெனவும் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

அதனையடுத்து, மொடக்குறிச்சி வட்டாரம், விளக்கேத்தி கிராமத்தில் அங்கக விவசாயம் செய்து வரும் பூபதி சுந்தரம், மரவள்ளி, முருங்கை, வாழை தோட்டத்தினை ஆய்வு செய்தார். விவசாயியிடம் இயற்கை வேளாண்மையில் பின்பற்றி கொண்டிருக்கும் தொழில்நுட்பங்கள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் அவ்விவசாயி உற்பத்தி செய்யும் பஞ்காவ்யா மற்றும் பூச்சி விரட்டிகள் உள்ளிட்டவைகளையும் ஆய்வு செய்தார்.

இயக்குநரின் ஆய்வின் போது ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் க.ஜெயராமன், விதைச்சான்று அலுவலர்கள் மற்றும் விதை ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.

Spread the love