August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விதைத் தரத்தை பாதுகாக்கும் வழிமுறைகள்

தஞ்சாவூர் விதைப்பரிசோதனை அலுவலர் தகவல்

தஞ்சாவூர், ஜூலை 6

தரமான விதைகளின் குணாதிசயங்களான நல்ல முளைப்புத்திறன், பிறரக கலவன் இல்லாமை, புறத்தூய்மை, பூச்சி நோய் தாக்காத, நிர்ணயிக்கப்பட்ட ஈரப்பதமுடைய விதைகளை தேர்ந்தெடுத்து விதைத்தல் நல்ல மகசூலுக்கு வழிவகுக்கும். அத்தகைய தரமான விதைகளை எவ்வாறு பாதுகாப்பது. விதைகள் அறுவடைக்குப்பின் ஒவ்வொரு பயிருக்கும் குறிப்பிட்ட ஈரப்பதத்திற்குள் இருக்குமாறு காயவைக்க வேண்டும். நெல் விதைகளுக்கு 13 சதவீதமும், பயறுவகை விதைகளுக்கு 9 சதவீதமும் எள், நிலக்கடைலை போன்ற எண்ணெய் வித்துப் பயிர்களுக்கு 9 சதவீதமும் இருக்க வேண்டும். அதிக ஈரப்பதம் இருந்தால் பூச்சி மற்றும் பூஞ்சாண நோய் தாக்குதல் ஏற்பட்டு விதையின் தரம் பாதிக்கப்படும்.

பிறரக கலவன் இல்லாத நல்ல விதைளை சேமிக்க, விதை அறுவடை செய்யும்போது கையால் அறுவடை செய்வது சிறந்தது. இயந்திரத்தினால் அறுவடை செய்யும்போது முதல் 3-4 பெட்டிகளை அறுவடை செய்து, விதையற்ற தானியமாக தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும். ஏற்கனவே ஒருமுறை பயன்படுத்திய சாக்குகளை பயன்படுத்தாமல் புதிய சாக்குகள் (அ) சீனி சாக்குகளை பயன்படுத்திடல் பிறஇரக கலவன் வர வாய்ப்பு குறைவு. விதை சுத்திகரிப்பு நிலையங்களில் ஒரு இரகம் சுத்தி செய்தபின் இரகசுத்திகரிப்பு செய்து அடுத்த இரகத்தை சுத்திகரிப்பு செய்ய வேண்டும்.

விதை மூட்டைகளை தரையில் அடுக்காமல் அட்டகங்களை பயன்படுத்தி 6 மூட்டைகளுக்கு மிகாமல் அடுக்க வேண்டும். அதற்கு மேல் அடுக்கினால் அடியில் உள்ள மூட்டைகளில் அழுத்தத்தினால் முளைப்புத்திறன் பாதிக்கப்படும். ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு முறை விதை சேமிப்பு கிடங்கில் செல்பாஸ் மாத்திரைகள் வைத்து அந்துபூச்சி மற்றும் வண்டுகளின் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறு சேமிக்கப்படும் விதைகளின் தரத்தை அறிய நெல் விதைகளுக்கு 100 கிராம், பயறு விதைகளுக்கு 150 கிராம், எள் விதைகளுக்கு 70 கிராம், நிலக்கடலை விதைகளுக்கு 500 கிராம், வீரிய பருத்தி விதைகளுக்கு 250 கிராம், என்ற அளவில் விதை மாதிரிகள் எடுத்து தங்கள் பெயர், இருப்பிட முகவரி மற்றும் பகுப்பாய்வு கட்டணமாக ரூ.80/- ஐ தஞ்சாவூர் காட்டுத்தோட்டத்தில் இயங்கி வரும் விதைப்பரிசோதனை நிலையத்திலும், திருவாரூர் விஜயபுரத்தில் உள்ள விதைப்பரிசோதனை நிலையத்திலும் மற்றும் நாகப்பட்டினம் வெளிப்பாளைத்தில் உள்ள விதைப்பரிசோதனை நிலையத்திலும் செலுத்தி விதைகளின் தரத்தினை பகுப்பாய்வு மூலம் தெரிந்து கொள்ள முடியும். இதனால் விதைக்கான செலவைக் குறைத்துக் கொள்வதுடன் அதிக மகசூலை பெற்று பயனடையலாம் என தஞ்சாவூர் விதைப்பரிசோதனை அலுவலர் இரா.குப்புசாமி தெரிவித்துள்ளார்.

Spread the love