June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விதைப்பண்ணைகளில் மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குநர் ஆய்வு

விருதுநகர், ஜூன் 23

விருதுநகர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு சித்திரை பட்டத்தில் 380 எக்டேர் பரப்பில் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டு விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அந்தந்த வட்டாரத்தைச் சேர்ந்த விதைச்சான்று அலுவலர்கள் பயிருக்கு ஏற்ப வளர்ச்சி பருவம் பூக்கும் தருணம் மற்றும் காய் முதிர்ச்சி அடைந்துள்ள தருணத்திலும் வயலாய்வுகள் மேற்கொண்டு வயல் தரம் பேணப்பட்ட விதைப்பண்ணையில் இருந்து விதைக்கொள்முதல் செய்திட பரிந்துரை செய்வார்கள். இந்த சித்திரை பட்டத்தில் உளுந்தில் வம்பன் 8, 9, 10 மற்றும் காய்கறியில் கொத்தவரை பூசாநவ்பஹார் இரகங்களில் விவசாயிகள் விதைப்பண்ணை அமைத்துள்ளார்கள்.

இதன் தொடர்ச்சியாக மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குநர் த.சுப்பாராஜ், வெம்பக்கோட்டை வட்டாரத்தில் சிப்பிப்பாறை மற்றும் ஏழாயிரம் பண்ணை கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள உளுந்து மற்றும் கொத்தவரை விதைப்பண்ணைகளை ஆய்வு செய்தார். ஆய்வின் போது இரண்டு சத DAP கரைசலை இலை வழியாக பூக்கும் தருவாயில் பயறுவகைப் பயிர்களில் தெளிப்பதன் மூலம் பூக்கள் உதிர்வது தடுக்கப்பட்டு நன்கு திரட்சியான காய்கள் உருவாகி கூடுதல் மகசூல் பெற இயலும் என தெரிவித்தார். இவ்வாய்வின் போது விருதுநகர் விதைச்சான்று அலுவலர் பொ.இரத்தினகுமார் உடன் இணைந்து வயலாய்வு மேற்கொண்டு பிற இரக கலவன்கள் முறையாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதா, வயல் தரம் பேணப்பட்டு உள்ளதா என்பதை ஆய்வு செய்தார். மேலும் விதைப்பண்ணைகளை முறையாக அறுவடை செய்து காயவைத்து சுத்தியறிக்கை பெற்று உரிய நேரத்தில் விதை சுத்தி நிலையங்களுக்கு அனுப்பி வைக்க அறிவுரை வழங்கினார். இவ்வாய்வின் போது சாத்தூர் உதவி விதை அலுவலர் ரமேஷ் உடனிருந்தார்.

Spread the love