June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விதைப்பரிசோதனையும் அதன் முக்கியத்துவமும்

வேளாண்மையின் முதன்மையான இடுபொருளாக விதைகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. நம் நாட்டில் வளர்ந்து வரும் மக்கள் தொகையின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய இன்றைய சூழலில் வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தியைப் பலமடங்கு பெருக்குவதோடு, உழவர்களின் வருமானத்தை மும்மடங்காக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு வேளாண்மையேயாகும். வேளாண்மை சிறப்பாக இருக்க வேண்டுமானால் தேவையான இடுபொருட்கள், தரமான வகையில் உரிய நேரத்தில் கிடைத்தால் மட்டுமே சாத்தியம். இதில் விதை என்னும் இடுபொருள், உற்பத்தியை பெருக்குவதிலும், அதை நிலைப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. தரமான விதைகளே உயர் விளைச்சலுக்கு வழி வகுத்து பசுமை புரட்சிக்கு வித்திட்டது. எனவேதான், விதைகள், விளைச்சலின் ஆதாரமாகக் கருதப்படுகின்றது.

தரமான விதையானது இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச விதை சான்றளிப்புத் தரத்திற்கு ஏற்ற புறத்தூய்மை, மரபுத்தூய்மை, முளைப்புத்திறன் மற்றும் விதையின் நலத்துடன் கூடிய வீரியமும் கொண்டிருக்கவேண்டும். விதையின் புறத்தூய்மை என்பது குறிப்பிட்ட பயிர் விதையைத் தவிர பிற பயிர் விதைகள், களை விதைகள் மற்றும் இதர தேவையற்ற பொருட்களின் கலப்பு இல்லாமல் தூய்மையானதாக இருத்தல்வேண்டும். விதையின் மரபுத் தூய்மை என்பது விதைப் பயிரானது தாயாதிப் பயிரின் மரபியல் குணங்களை ஒத்திருக்கவேண்டும். முளைப்புத்திறன் என்பது நாம் விதைக்கும் விதையில் எவ்வளவு விதைகள் நன்கு முளைத்து நல்ல செடிகளை கொடுக்கின்றன என்பதைக் குறிக்கின்றது. இது மட்டுமல்லாது, விதைகள் பூச்சி, பூஞ்சாணங்களின் தாக்குதலின்றி நல்ல வீரிய செடிகளை உற்பத்தி செய்பவைகளாக இருத்தல் வேண்டும். விதை உற்பத்தி, விதைத் தரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தே இந்திய அரசு தரமான விதைகளை விவசாயிகளுக்கே விநியோகம் செய்ய குறைந்த பட்ச தரக்கட்டுபாட்டினை உருவாக்கி அதனை அமுல்படுத்த சட்டமும் இயற்றியுள்ளது.

நமது மாநிலத்தில, தற்போது 33 அறிக்கை செய்யப்பட்ட விதைப் பரிசோதனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. விதைச்சான்றளிப்பு பிரிவிலிருந்து பெறப்படும் சான்று விதை மாதிரிகள், விதை ஆய்வு பிரிவிலிருந்து பெறப்படும் ஆய்வாளர் விதை மாதிரிகள் மற்றம் விவசாயிகள், விதை விற்பனையாளர்கள் மற்றும் விதை உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்படும் பணி விதை மாதிரிகளும் அறிவிக்கை செய்யப்பட்ட விதை பரிசோதனை நிலையங்களில் பரிசோதனை செய்யப்படுகின்றன.

முளைப்புத்திறன் சோதனை:

முளைப்புத்திறன் என்பது விதை உயிரும் வீரியமும் கொண்டு, கருமுளைவிட்டு பின்னர் வளர்ச்சிக்கு அத்தியாவசியமாக பாகங்கள் உருவாகி இயல்பான செடியாவதற்குரிய திறனே எனலாம். நல்ல முளைப்புத்திறன் கொண்ட விதைகளை விதைப்பதன் மூலம் வயலில் பயிர்கள் நிறைவான பயிர் எண்ணிக்கையில் செழித்து வளரும். ஆனால், அதே சமயம், முளைப்புத்திறன் குறைந்த எண்ணிக்கையில் பயிர்கள் வளர்ந்து விளைச்சல் பாதிக்கப்படும். விதைச்சட்டம் 1966 பிரிவு 7-ன்படி ஒவ்வொரு பயிருக்கும் மேற்கூறியவாறு குறைந்த அளவு முளைப்புத்திறன் நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

முளைப்புத்திறன் சோதனையின் போது நாற்றுகளை இயல்பானது, இயல்பற்றது எனவும், முளைக்காத விதைகளை கடினமானது, உயிரற்றது எனவும் வகைப்படுத்தி சோதனையின் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

பயிர் குறைந்தபட்ச முளைப்புத்திறன் (சதவிகிதம்)
மக்காச்சோளம் 90
பார்லி, ஓட்ஸ், கோதுமை, கொண்டக்கடலை 85
நெல், கொள்ளு, எள், சணப்பு 80
சோளம், கம்பு, கேழ்வரகு, துவரை, உளுந்து, தட்டைப்பயறு, பாசிப்பயறு, பட்டாணி, பிரெஞ்சு பீன்ஸ், அவரை 75
நிலக்கடலை, சூரியகாந்தி, ஆமணக்கு, சோயாபீன்ஸ், கத்திரி, தக்காளி, கீரை, முட்டைக்கோஸ், நூல்கோல், வெங்காயம், முள்ளங்கி, டர்னிப், கொத்தவரை, முருங்கை, கொளிஞ்சி, தக்கைப்பூண்டு 70
பருத்தி, வெண்டை, காலிபிளவர், மல்லி 75
பூசணி, தடியங்காய், பாகல், மிளகாய், புடலை, பீர்க்கு, சுரை, தர்பூசணி, பப்பாளி 60

விதைப்பரிசோதனைக்கான விதை மாதிரி
விதை பரிசோதனையினை மேற்கொள்ள விதை விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள், உழவர்கள் தங்களிடம் இருப்பில் உள்ள விதைக் குவியல்களில் இருந்து மாதிரிகள் எடுத்து, விதை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பலாம். ஒவ்வொரு பயிருக்கும் மாதிரி எடுத்து அனுப்ப வேண்டிய அளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பயிர் அனுப்பவேண்டிய விதை மாதிரி அளவு
(கிராமில்)
நிலக்கடலை, மக்காச்சோளம் 500
அவரை, பிரெஞ்சு பீன்ஸ் 450
கொண்டைக்கடலை 400
பருத்தி (பஞ்சு நீக்காதது) 350
ஆமணக்கு, கொள்ளு, பட்டாணி, பாகல், புடலை 250
வீரிய ஒட்டு பருத்தி (பஞ்சு நீக்காதது) 200
துவரை, தட்டைப்பயறு, சோயா, பருத்தி (பஞ்சு நீக்கியது), பீர்க்கன், 150
சோளம், உளுந்து, பரங்கி, பாசிபயறு, தர்பூசணி, கொத்தவரை, வெண்டை, பூசணி, சுரக்காய், சூரியகாந்தி, வீரிய ஒட்டு பருத்தி (பஞ்சு நீக்கியது), வெள்ளரி 100
நெல், முள்ளங்கி, சணப்பு, பீட்ரூட், இதர கீரை வகைகள் 50
கொத்தமல்லி 30
கம்பு, ராகி, தக்கைப்பூண்டு, எள், வேலி மசால், பாலக்கீரை, புளிச்சகீரை 25
கேரட், நூல்கோலி, காலிபிளவர், முட்டைக்கோஸ், வெங்காயம், கத்திரி, தக்காளி, மிளகாய் 10
இவ்வகை மாதிரிகளை, உரிய விபரங்களுடன் அனுப்பப்படவேண்டும்.

தேவைப்படும் விபரங்கள் :

  1. விதை மாதிரி அனுப்புபவர் பெயர்.
  2. இருப்பிட முகவரி ஃ பின்கோட்டுடன்
  3. பயிர்
  4. இரகம்
  5. குவியல் எண்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் விதைப்பரிசோதனை மேற்கொள்ள விதைப்பரிசோதனை கட்டணமாக ரூ.80/- (ரூபாய் எண்பது மட்டும்) உடன் பெரிய மில் தெரு, விஜயபுரம், திருவாரூர் என்ற முகவரியில் செயல்படும் விதைப்பரிசோதனை நிலையத்தை அணுகி பயன்பெறலாம்.

இத்தகவலை திருவாரூர், விதைப்பரிசோதனை நிலைய இரா.குப்புசாமி, தஞ்சை சரக விதை பரிசோதனை அலுவலர் மற்றும் வேளாண்மை அலுவலர் க.புவனேஸ்வரி, ஆகியோர் தெரிவித்தனர்.

Spread the love