June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விதையின் தரம் அறிய பகுப்பாய்வு செய்வீர்

திருநெல்வேலி, ஜூன் 17

விதைகளின் முளைப்புத்திறனை அறிந்து கொள்ள விதைகளை பகுப்பாய்வு செய்து விற்க வேண்டும். திருநெல்வேலி விதைப்பரிசோனை நிலையத்தில் வீரிய ஒட்டு வகைகளான வெண்டை, மிளகாய், கத்தரி, பூசணி, வெள்ளரி, புடலை, பாகற்காய், சுரைக்காய், பரங்கிக்காய் மற்றும் தக்காளி ஆகிய பயிர்களின் விதைகள் பெரும்பாலும் தனியார் விதை உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்பட்டு அவரவர் ஆய்வுக்கூடங்களிலேயே பகுப்பாய்வு செய்யப்பட்டு விற்பனைக்கு வினியோகிக்கப்படுகிறது.

இந்த விதைகள் பெரும்பாலும் வீரிய ஒட்டு வகை என்பதால் அவற்றின் விலையும் மிக அதிகம். எனவே இந்த விதைகளின் தரம் குறையாமல் சேமித்து வைத்தல் மற்றும் 6 மாதங்களுக்கு மேல் சேமிப்பில் இருந்தால் அதன் தரத்தை மீண்டும் சோதனை செய்த பின் விற்பனை செய்வது மிக அவசியம்.

முளைப்புத்திறன் கொண்ட காய்கறி பயிர்களான மிளகாய், பூசணி, வெள்ளரி, புடலை, சுரைக்காய், பீர்க்கன் போன்ற விதைகளுக்கு குறைந்தபட்ச முளைப்புத்திறன் 60 சதவீதம் இருத்தல் வேண்டும். கத்தரி மற்றும் தக்காளி ஆகியவற்றின் குறைந்தபட்ச முளைப்புத்திறன் தேவை 70 சதவீதமும், வெண்டை மற்றும் மிளகாய் பயிர்களுக்கு குறைந்தபட்ச முளைப்புத்திறன் 65 சதவீதமும், மற்றும் 60 சதவீதம் ஆகும். எனவே. விதை விற்பனையாளர்கள் தங்களிடம் உள்ள ஒவ்வொரு பயிர் விதைக்கு பகுப்பாய்வு செய்து குறைந்தபட்ச முளைப்புத்திறனில் தேறியுள்ளதா? என்பதை உறுதி செய்து விற்பனை செய்யவேண்டும். பகுப்பாய்வு செய்யப்படாத விதை குவியலாக இருந்தால் பகுப்பாய்வு செய்த பின்னர் விற்பனை செய்ய வேண்டும்.

பகுப்பாய்வு செய்ய விதை விற்பனையாளர்கள் அல்லது விவசாயிகள் தங்களிடம் உள்ள ஒவ்வொரு விதைக்குவியலில் இருந்தும் கத்தரி, மிளகாய், தக்காளி, கீரை விதையாக இருப்பின் 10 கிராமும் , வெண்டை பூசணி, வெள்ளரி தர்பூசணி, சுரைக்காய், பீர்க்கன் விதையாக இருப்பின் 100 கிராமும், புடலை மற்றும் பாகற்காய் விதைகளாக இருந்தால் 250 கிராமும் எடுத்து இணையதளம் மூலம் பதிவு (SPECS Portal) திருநெல்வேலி விதைப்பரிசோதனை ஆய்வகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கொடுத்து ஒரு மாதிரிக்கு ரூபாய் 80-வீதம் செலுத்தி விதைகளின் பகுப்பாய்வு முடிவுகளை SPECS Portal இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என திருநெல்வேலி விதைப்பரிசோதனை அலுவலர் திருமதி.ஞா.ஆனந்தி ராதிகா தெரிவிக்கிறார்.

Spread the love