June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விதையின் புறத்தூய்மை அறிந்து பயிர் செய்ய வேண்டுகோள்

திருநெல்வேலி, ஜூன் 2

திருநெல்வேலி விதைப்பரிசோதனை ஆய்வகத்தில் முளைப்புத்திறன், புறத்தூய்மை, ஈரப்பதம் மற்றும் பிறரகக் கலவன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பயிர் சாகுபடிக்கு தேவையான முக்கிய இடுபொருட்களில் முதன்மையானது விதை. அந்த விதை நல்ல தரமானதாக இருந்தால் தான் விளைச்சல் அதிகமாக கிடைக்கும். பயிர் அறுவடை முடிந்து கதிரடித்து பிரிக்கப்பட்டு எடுக்கப்படும் விதைக் குவியல்களிலிருந்து கிடைக்கும் விதைகள் உடனடியாக விதைப்பதற்கோ நடவு செய்வதற்கோ தகுதியானதாக இருப்பதில்லை. அறுவடை செய்யப்பட்ட விதைகளுடன் மண், சிறு கற்கள், இலைகளின் துகள்கள், குச்சி, சாவி விதைகள் கலந்து இருக்கும். எனவே, அறுவடை முடிந்து பிரித்தெடுக்கப்படும் விதைகளை விதைச் சுத்திகரிப்பு செய்து பிறபொருட்கள் கலப்பு இன்றி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல் அவசியம்.

திருநெல்வேலி, விதைப்பரிசோதனை ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படும் புறத்தூய்மை சோதனையின் போது தூய விதைகள் களைவிதைகள், பிறதானிய விதைகள் மற்றும் உயிர்ப்பற்ற பொருள்கள் கலந்துள்ளனவா எனக் கண்டறியப்படுகிறது. நெல், பயறு வகை, சிறுதானியம், சூரியகாந்தி, பருத்தி பயிர்களுக்கு 98 சதவீதமும், வெண்டை 99 சதவீதமும், நிலக்கடலை 96 சதவீதமும் புறத்தூய்மை இருத்தல் வேண்டும். எனவே விவசாயிகள் தாங்கள் சேமிக்கும் விதையினை தூய விதையாக சேமித்து முழுமையான பயனை பெறுமாறு திருநெல்வேலி விதைப்பரிசோதனை அலுவலர் ஞா.ஆனந்தி ராதிகா கேட்டுக் கொண்டார்.

Spread the love