ஈரோடு, டிச.24
விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையின் மூலமாக தரமான விதை உற்பத்தி குறித்து புத்தூட்ட பயிற்சி 22.12.2021 ஈரோடு மாவட்டம், சிவகிரி, விதை சுத்திகரிப்பு நிலையத்தில், விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை மூலம் நடத்தப்பட்டது.
ஈரோடு, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர், சு.மோகனசுந்தரம், தலைமையில் நடைபெற்ற பயிற்சியின் போது அவர் பேசுகையில், விதை உற்பத்தியாளர்கள் அனைவரும் விதைச்சான்று நடைமுறைகளை கடைபிடித்து தரமான விதை உற்பத்தியினை உறுதி செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் ஈரோடு மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்டம் செயல்படுத்தப்படும் 97 கிராம ஊராட்சிகள் மற்றும் நிலம் திட்டப்பகுதிகளில் விவசாயிகளை அதிகளவில் தேர்வு செய்து உரிய தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கி விதைப்பண்ணைகளை அமைக்கவும், இயற்கை வேளாண்மை செய்துவரும் விவசாயிகளை அங்ககச்சான்றுக்கு பதிவு செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து விதைச்சான்று அலுவலர் (தொழில்நுட்பம்) மா.கணேசமூர்த்தி, விதைப்பண்ணை பதிவு செய்தல், விதைப்பண்ணை பராமரிப்பு, பயிர் விலகு தூரம், கலவன்களை நீக்குதல், பூச்சி மற்றும் நோய்த்தாக்குதலில் இருந்து விதைப்பயிரை பாதுகாத்தல், களைகளை நீக்கி தரமான விதை உற்பத்தி செய்வது உள்ளிட்ட தொழில்நுட்ப உத்திகள் குறித்து பயிற்சியும் தொடர்ந்து விதைச்சான்று நடைமுறைகளை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள கணிணி மென்பொருள் SPECS- Seed Production Enforcement and Certification Systemல் மேற்கொள்வது பற்றி செயல் முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.
பயிற்சியில் விதைச்சான்று அலுவலர் ரா.ஹேமாவதி கலந்து கொண்டு விதை உற்பத்தியாளர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார். பயிற்சியில் ஈரோடு, கொடுமுடி, மொடக்குறிச்சி மற்றும் சென்னிமலை வட்டாரங்களைச் சேர்ந்த உதவி விதை அலுவலர்கள் மற்றும் இப்பகுதியைச் சேர்ந்த தனியார், அரசு சார்ந்த விதை உற்பத்தியாளர்கள் கலந்துக் கொண்டனர்.