திருநெல்வேலி, ஜூன் 15
விதைப்பறிக்கை ஒவ்வொரு பயிருக்கும், இரகம் வாரியாக, விதை உற்பத்தி நிலை வாரியாக தயார் செய்திட வேண்டும். ஒரே இரக விதைப்பண்ணையாக இருந்தாலும் 50 மீட்டர் இடைவெளிக்கு அதிகமாக இருந்தாலும், ஒரு வயலுக்கும் மற்றொரு வயலுக்கும் விதைப்பு அல்லது நடவு செய்த நாட்கள் ஒரு வாரத்திற்கு மேல் வித்தியாசம் இருந்தால், தனித்தனி விதைப்பறிக்கைகளாக பதிவு செய்திட வேண்டும். விதைப்பு செய்து 35 நாட்கள் அல்லது பூப்பருவத்திற்கு 15 நாட்கள் முன்பு அதில் எது குறைவோ அந்த நாட்களுக்குள் பொதுவாக விதைப்பறிக்கை பதிவு செய்திட வேண்டும். www.seedcertification.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்திட வேண்டும். விதைப்பு அறிக்கையுடன் பயன்படுத்தப்பட்ட சான்று அட்டைகள், விதை கொள்முதல் செய்த இரசீது மற்றும் விதைப்பண்ணை வயலின் வரைபடம் இணைத்து 3 நகல்களை தயார் செய்து விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பிட வேண்டும். விதைப்பண்ணை பதிவு கட்டணம் ரூ.25, விதைப்பரிசோதனைக் கட்டணம் ரூ.80 மற்றும் வயலாய்வு கட்டணம் பயிர் மற்றும் பதிவு செய்யும் பரப்பிற்கு ஏற்றவாறு கட்டணம் செலுத்திட வேண்டும்.