August 14, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விதை தரம் பேணுதல்

வித்தே விளைச்சலுக்கு முதலாகும் எனபதற்கேற்ப விவசாயத்துக்கு தேவையான மிக முக்கியமான இடுபொருட்கள் நல்விதையாகும். நல்விதை என்பது அதிக முளைப்புத்திறன் அதிகச் சுத்தம் மற்றும் குறைந்த அளவு ஈரத்தன்மை கொண்டதாகும்.

விதை நல்ல தரமானதாக (சான்று பெற்ற விதைகள்) இருந்தால் தான் மகசூல் அதிகமாக கிடைத்து வருமானம் அதிகரிக்கும்.

பயிர் அறுவடை முடிந்து கதிரடித்து பிரிக்கப்பட்டு எடுக்கப்படம் விதை குவியல்களிலிருந்து கிடைக்கும் விதைகள் கொண்டு உடனடியாக விதைப்பதற்கு தகுதியானதாக இருக்காது. அந்த விதைகளுடன் மண், சிறு கற்கள், இலைகளின் துகள்கள், குச்சி, சாவி கலந்தவையாக இருக்கும். எனவே, விதைக்காக அறுவடை செய்யும் விதைகளை அறுவடை முடிந்தவுடன் காய வைக்க வேண்டும்.

ஒரு நல்ல விதைக்கு முதல் எதிரி அதிக ஈரப்பதம். விதைகளின் ஈரப்பதத்தை படிப்படியாக குறைக்க வேண்டம். அறுவடை முடிந்து முன்சுத்தி செய்ததும் மறுநாளுக்குள்ளாக காயவைக்கத் துவங்க வேண்டும். களம் சூடு அடையும் முன்பு விதைகளை விரித்து 3 அல்லது 3.30 மணி நேரம் காய வைத்து எவ்வளவு நேரம் காய வைத்ததோமோ அவ்வளவு தூரம் விதைகளை ஆற வைத்துப் பின்பு மறு நாள் இதே மாதிரி செய்ய வேண்டும். தொடர்ந்து 3 அல்லது நான்கு நாள்கள் இவ்வாறு செய்வதால் விதை ஈரம் குறைவதுடன் விதையின் முளைப்புத்திறனும் கெடாது இருக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு சேமிக்கும் நெல்லுக்கு அதிகபட்சம் 13 சதம், சிறுதானியங்களுக்கு 12 சதம், பருத்தி விதைக்கு 10 சதம், பயறு வகை, சூரியகாந்தி, நிலக்கடலை போன்றவற்றிற்கு 9 சதம் என்ற கணக்கில் ஈரப்பதம் இருத்தல் அவசியம். இவ்வாற சேமிப்பதால் விதைகளின் முளைப்புத்திறன் பாதுகாக்கப்படுவதுடன், பூச்சி நோய் தாக்குதலும் குறைகிறது.

நன்கு காய வைத்த விதைகளை புதிய கோணிகளில் மட்டுமே சேமித்து வைத்தல் வேண்டும். மூட்டைகளின் மேல் இரகத்தினை தெளிவாகக்க குறிப்பிடுதல் வேண்டும். பல இரகங்கள் உள்ள நிலையில் மூட்டைகளை இரக வாரியாக தனி அறையில் வைத்தல் அவசியம். விவசாயிகள் மேற்கண்ட அறிவுரைகளை தவறாது கடைப்பிடித்து பயன்பெற திருநெல்வேலி விதை ஆய்வு துணை இயக்குநர் ரா.ராஜ்குமார் கேட்டுக் கொண்டார்.

Spread the love