திருப்பூர், ஏப்.26
விதை நிலக்கடலைக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால் மானிய விலையி்ல் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நம்பியூர், அந்தியூர், அவிநாசி, சேவூர், ஊத்துக்குளி, பெருந்துறை, செங்கப்பள்ளி உள்ளிட்ட இடங்களில், வைகாசி இரண்டாவது வாரம், விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி மேற்கொள்வர். தற்போதைய சூழலில், 5,000 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களை, உழவு செய்து, விவசாயிகள் தயார் நிலையில் வைத்துள்ளனர். நடவு பணிக்காக, அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில், விதை நிலக்கடலை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். ஆனால், பெரும்பாலான மையங்களில், விதை நிலக்கடலைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், வேளாண் விரிவாக்க மையங்களில், விவசாயிகளின் தேவைக்கேற்ப விதை நிலக்கடலை இருப்பு இல்லை. தாராபுரம், மடத்துக்குளம், பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில், தற்போது விதை நிலக்கடலை உள்ளது. எனவே, திருப்பூர் மாவட்ட நிர்வாகம், அங்கிருந்து அவற்றை கொள்முதல் செய்து, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையம் மூலம், விவசாயிகளுக்கு, மானிய விலையில் வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.