September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை நாளில் சென்னையில் இருந்து 2 லட்சம் பேர் பயணம்

சென்னை, செப்.11

விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையையயாட்டி சென்னையில் இருந்து பேருந்துகள் மூலம் சுமார் 2 லட்சம் பேர் வெளியூர்களுக்கு பயணமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. இத்துடன் சேர்த்து அடுத்து சனி, ஞாயிறு ஆகிய இரண்டு விடுமுறை நாள்கள் இருப்பதால் வெளியூர்களில் தங்கி படித்து, வேலைபார்த்து வரும் பலரும் கடந்த வியாழக்கிழமை முதலே சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.

குறிப்பாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு வரை கூட்ட நெரிசல் காணப்பட்டது. இவ்வாறு விடுமுறைக்காக சென்னையில் இருந்து வியாழக்கிழமை மொத்தம் 576 சிறப்புப் பேருந்துகள் உள்பட 2,410 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. அவற்றில் 1.32 லட்சம் பேர் பயணித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றனர். இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, பயணிகளின் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்பட்டன. ஊர்களுக்குச் சென்றவர்கள் திரும்பி வரவும் இயக்குவதற்கு போதிய பேருந்துகள் கையிருப்பில் இருப்பதாக தெரிவித்தனர்.

அதே போல், ஆம்னி பேருந்துகளைப் பொருத்தவரை சென்னையில் இருந்து 1412 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அவற்றில் சுமார் 59 ஆயிரம் பேர் பயணித்தனர். இதுகுறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவிக்கையில், தொடர் விடுமுறையின்போது குறைந்தபட்சம் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆம்னி பேருந்துகளில் பயணிப்பது வழக்கம். ஆனால் இந்த எண்ணிக்கை தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இதை ஒப்பிடும்போது ஊர் திரும்புவதற்கு ஞாயிற்றுக்கிழமை கணிசமான பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

Spread the love