August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விரக்தியில் புடலங்காய்களை சாலையில் கொட்டிய விவசாயி

சேலம், மே 15

புடலங்காய் விலை போகாததால் விரக்தி அடைந்த விவசாயி ஒருவர், மூட்டை மூட்டையாக புடலங்காய்களை சாலையில் கொட்டியதால், வாழப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா பரவலை கட்டுப்படுத்த, பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால், மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். உணவகங்கள், சிற்றுண்டி உள்ளிட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன. திருமணங்கள், திருவிழாக்கள் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் வாழப்பாடி பகுதியில் காய்கறிகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. காய்கறிகளை அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு செல்லும் செலவிற்கு கூட விலை கட்டுப்படி ஆகாததால், விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சனிக்கிழமை வாழப்பாடி தினசரி மண்டிக்கு புடலங்காயை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயி ஒருவர், விலை போகாததால் விரக்தியடைந்தார். இதனால், மூட்டை மூட்டையாக புடலங்காய்களை கொண்டு சென்று வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே, நடு சாலையில் கொட்டினார்.

இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி காவல் துறையினர், அப்பகுதிக்கு விரைந்து வந்து காய்களை கொட்டிய விவசாயி மற்றும் பொதுமக்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

காய் விலை போகாததால் விரக்தி அடைந்த விவசாயி ஒருவர், மூட்டை மூட்டையாக புடலங்காய்களை சாலையில் கொட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Spread the love