June 24, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விளைச்சலை அதிகரிக்க விதைப் பரிசோதனை செய்வீர்!

திண்டுக்கல், மே 25

விதைப்பரிசோதனை செய்து விதைத்தால் அதிக மகசூல் பெறலாம் என திண்டுக்கல் மாவட்ட விதைப் பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் ப.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, விதை உற்பத்தி செய்வோர், விற்பனை செய்வோர் மற்றும் விவசாயிகள் அனைவரும் தங்களிடமுள்ள விதைகளின் தரத்தை அறிந்து விதைகளை விதைப்பதால் அதிக மகசூல் பெறலாம். குறைந்த தரம் கொண்ட விதைகளை நடவு செய்வதின் விளைவாக ஏற்படும் இடர்பாடுகளை குறைப்பதே விதை பரிசோதனை நிலையங்களின் நோக்கம் ஆகும். முளைப்புத்திறன் பரிசோதனையானது விதை முளைப்பிற்கு சாதகமான சூழ்நிலைகளான ஈரப்பதம், தட்பவெட்பநிலை, ஊடகம் மற்றும் ஒளிச்செறிவு போன்றவற்றில் மேற்கொள்ளப்படுகிறது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பராமரிக்கும் விதைகளின் முளைப்புத்திறனை இயல்பான நாற்றுகள், இயல்பற்ற நாற்றுகள், கடின விதைகள் மற்றும் முளைக்காத விதைகள் என்று வகைபடுத்தப்படுகிறது. இயல்பான நாற்றுகள் என்பவை பயிருக்கு சாதகமான சூழ்நிலைகளான மணல், நீர், தட்பவெப்பநிலை மற்றும் ஒளிச்செறிவில் நன்கு வளரும் நாற்றுக்கள், சாதகமான சூழ்நிலையில் நன்கு வளராமல் வளர்ச்சி குன்றியும், அழுகியும் காணப்படும் நாற்றுகள் இயல்பற்ற நாற்றுகள் ஆகும். கடின விதைகள் ஆய்வுக்காலம் முடியும் வரை ஈரத்தை உறிஞ்சாமல் கடினமாக காணப்படும். முதல் ஆய்வில் முடிவுகள் திருப்பதிகரமாக இல்லாவிடில் அவற்றின் முடிவு வெளியிடப்படாமல் வைத்திருந்து பின்னர் மறு ஆய்வு செய்யப்பட்டு இறுதி முடிவு அறிவிக்கப்படும். முடிவானது 100 விதைகளுக்கு எத்தனை விதைகள் இயல்பான, இயல்பற்ற, கடின மற்றும் முளைக்காத விதைகள் என அறிவிக்கப்படும்.

எனவே திண்டுக்கல் மாவட்ட விதை உற்பத்தியாளர்கள், விதை விற்பனையாளர்கள், விவசாயிகள் தங்கள் வசம் உள்ள விதைகளில் 100 கிராம் அளவு விதையினை திண்டுக்கல் உழவர் மைய வளாகத்தில் உள்ள விதைப்பரிசோதனை நிலையத்தில் பயிர் இரகம், முழு முகவரியுடன், ஒரு விதை மாதிரிக்கு ரூ.80/- மட்டும் செலுத்தி, ஆய்வு செய்து பயனடையலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love