August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விளைச்சல் அதிகரிப்பால் கறிவேப்பிலை விலை சரிவு

சேலம், ஏப்.26

ஆத்தூரில், விளைச்சல் அதிகரிப்பு காரணமாக, ஒரு கிலோ கறிவேப்பிலை, ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனையாகிறது.

சேலம் மாவட்டம், ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல், வீரகனூர் சுற்றுவட்டார பகுதிகளில், 1,000 ஏக்கருக்கு மேல், கறிவேப்பிலை பயிரிடப்படுகிறது. அப்பகுதிகளில் இருந்து, தலைவாசல் மார்க்கெட், உழவர் சந்தைகள் மட்டுமின்றி, சென்னை, திருச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு, வியாபாரிகள் வாங்கிச்செல்கின்றனர். புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திராவுக்கும் அனுப்பப்படுகிறது. கேரளாவில், கறிவேப்பிலை பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளதால், அங்கு அதிகளவில் அனுப்பப்படுகிறது. 2020 அக்டோபரில், கிலோ, ரூ.30 வரை, கறிவேப்பிலை விற்பனையானது. அதில், புள்ளி தாக்கம் ஏற்பட்டு, விளைச்சல் குறைய, விலை உயரத் தொடங்கியது. கடந்த மார்ச் வரை, ஒரு கிலோ கறிவேப்பிலை, ரூ.100 முதல் ரூ.120 வரை, விற்பனையானது. தற்போது, விளைச்சல் அதிகரிப்பால், அதன் விலை, ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனையாகிறது.

இது குறித்து, ஆத்தூர் விவசாயிகள் கூறுகையில், ஆத்தூரில், 30 ஆண்டுக்கு மேல் கறிவேப்பிலை சாகுபடி செய்யப்படுகிறது. கிலோ அதிகபட்சமாக, ரூ.45 முதல் ரூ.50 வரையே விற்பனையானது. எந்த ஆண்டும் இல்லாதபடி, ஜனவரி, பிப்ரவரி, மார்ச்சில், விவசாய தோட்டங்களில், கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை, வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். வெளி மார்க்கெட்டில், கிலோ, ரூ.70 முதல், ரூ.120 விலையில், இரு மாதங்களாக விற்பனை செய்கின்றனர். பனிப்பொழிவால் ஏற்பட்ட புள்ளி நோயால், ஏக்கருக்கு, 4 டன்னுக்கு பதில், 2 டன் மட்டும் விளைச்சல் இருந்ததால், விலை உயர்வு அதிகமாக இருந்தது. தற்போது, கோடை காலத்தில் கணிசமான அளவில் தண்ணீர் உள்ளதாலும், நோய் தாக்கம் இல்லாததாலும், கறிவேப்பிலை விளைச்சல் அதிகரித்து, ரூ.15 முதல் ரூ.20 வரையே விற்பனையாகிறது என அவர்கள் கூறினர்.

Spread the love