January 24, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விளைச்சல் இருந்தும் விற்பனைக்கு வழியில்லை

சிவகங்கை, மே 17

திருப்புவனம் வட்டாரத்தில் மாங்காய் விளைச்சல் அதிகமிருந்தும் நடைபாதை வியாபாரிகளுக்கு தடையால் மாங்காய்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டாரத்தில் பூவந்தி, கிளாதரி உள்ளிட்ட பகுதிகளில் மாங்காய் விளைச்சல் அதிகம் உள்ளது. கடந்தாண்டு பெய்த மழை காரணமாக மா மரங்களில் அதிகளவு பூக்கள் பூத்திருந்தன. மாங்காய்களுக்கு மார்ச் முதல் ஜூலை வரை தான் சீசன். தினசரி 100 மரங்களில் இருந்து ஒரு டன் மாங்காய் பறிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படும். சிறு வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து தினசரி மாங்காய் வாங்கி விற்பனை செய்வது வழக்கம்,

ஊரடங்கால் வியாபாரம் பாதித்த நிலையில் நடைபாதை வியாபாரிகளுக்கும் தடை விதிக்கப்பட்டதால் பறிக்கப்பட்ட மாங்காய்களை விற்பனை செய்ய முடியாமல் அறுவடையை குறைத்து விட்டனர். பூவந்தியில் 100 ஏக்கரில் இமாம் பசந்த், பங்கனப்பள்ளி, மல்கோவா, கிரேப், பெங்களுரா கிரேப், பாலாமணி, செந்தூரா, பஞ்சவர்ணம், ருமேனியா, காசாலட்டு, அல்போன்சா உள்ளிட்ட ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளன.

இது குறித்து பழ தோட்ட நிர்வாகி ஒருவர் கூறுகையில், திருப்புவனம், மதுரை, மேலூர், இராமேஸ்வரம், இராமநாதபுரம், சிவகங்கையைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் பழ தோட்டத்தை நம்பியே பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

மார்ச் முதல் ஜூலை வரை மாம்பழம், அதன்பின் நெல்லிக்காய், சப்போட்டா பழம், கொய்யா பழம், எலுமிச்சை, நாவல் பழம் என தொடர்ச்சியாக பழ வகைகள் விற்பனை செய்யப்படும். 1,500 மரங்கள் உள்ளன. தினசரி 300 முதல் 500 கிலோ வரை பறிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படும். சிறு வியாபாரிகளுக்கு அனுமதி இல்லாததால் யாரும் வருவதில்லை, பழங்கள் பறிக்கப்படாமல் மரத்திலேயே பழுத்து வீணாகி வருகிறது. எனவே, சிறு வியாபாரிகளுக்கு தளர்வு அறிவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Spread the love