August 4, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விளைச்சல் சரிவால் வெற்றிலை விலை உயர்வு

கரூர், ஏப்.20

கரூர் மாவட்டத்தில், வெற்றிலை விளைச்சல் குறைந்துள்ள நிலையில், விலை அதிகரித்துள்ளது.

கரூர், புகளூர் வட்டார பகுதிகளான நொய்யல், வேலாயுதம்பாளையம், தளவாப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், சுமார் 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை சாகுபடி நடக்கிறது.
மாவட்டத்தில் குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கரூர் வட்டார பகுதிகளில், சுமார் 5,000 ஏக்கரில் வெற்றிலை சாகுபடி நடந்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் இருந்து, வெளி மாநிலம், வெளி மாவட்டங்களுக்கு வெற்றிலை அனுப்பப்படுகிறது. இந்நிலையில், கோடை வெயில் அதிகரிப்பதால், வெற்றிலை கொடிகள் வாட துவங்கியுள்ளன. இதனால் விளைச்சல் குறைந்து, விலை உயர்ந்துள்ளது.

இது குறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், காவிரியாற்றில் குடிநீருக்காக மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், நிலத்தடி நீர், கிணற்று நீரை நம்பிதான், வெற்றிலை விவசாயம் நடக்கிறது. இந்நிலையில், கோடை வெயில் அதிகரித்துள்ளதால், வெற்றிலை கொடிகள் வாடி போய், இறுதியில் காய்ந்து, விளைச்சல் குறைந்துள்ளன. விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த மாத துவக்கத்தில், இளம்பயிர் வெற்றிலை ஒரு கவுளி, ரூ.50, ஒரு மூட்டை, ரூ.6,000க்கு விற்பனையானது. தற்போது, ரூ.70, ஒரு மூட்டை, ரூ.7,000க்கு விலை உயர்ந்துள்ளது. அதேபோல் முதிர்கால் வெற்றிலை கடந்த மாதம், ஒரு கவுளி, ரூ.20, ஒரு மூட்டை, ரூ.3,000 வரை விற்பனையானது. தற்போது, ரூ.30, ஒரு மூட்டை, ரூ.4,000க்கு விற்பனையாகிறது. வரும் மே மாதம் வெற்றிலை சீசன் காலம். அதிகளவில் வெற்றிலை விளைச்சல் அடைந்தால், விலை சற்று குறைய வாய்ப்புள்ளது என அவர்கள் கூறினர்.

Spread the love