August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விவசாயம் தான் மனித உயிர்களின் ஜீவநாடி வேளாண் கண்காட்சியில் மாவட்ட ஆட்சியர் பேச்சு

ராணிப்பேட்டை, மார்ச் 29

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த சகாயத்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள டான் போஸ்கோ வேளாண்மை கல்லுாரி மாணவிகள் கடந்த ஒரு மாதமாக காவேரிப்பாக்கம் யூனியனுக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் தங்கி விவசாய உபகரணங்கள் பயன்படுத்துதல் மற்றும் விவசாயம் சார்ந்த நேரடி பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இறுதி வார நிகழ்ச்சி அய்யம்பேட்டை சேரி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. அப்போது கல்லுாரி மாணவிகள் பல்வேறு வகைகளில் விவசாய இடுபொருட்கள் குறித்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தனர். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது: விவசாயம் தான் உல கத்தின் ஆதி தொழில். விவசாயம் செய்வதிலிருந்து தான் மனித நாகரீகம் பரிணமிக்க தொடங்கியது. உலகம் இருக்கும் வரை நீடித்து நிலைத்து நிற்கும் ஒரே தொழில் விவசாயம் மட்டும் தான்.

கரோனா பெருந்தொற்று காலத்தில் தான் விவசாயத்தின் அருமை இந்த உலகத்தில் உள்ள அனைவருக்கும் தெரிய வந்தது. விவசாயிகள் செயற்கை உரங்களை குறைத்து கொண்டு இயற்கை முறையில் உரங்களை பயன்படுத்தினர். மேலும் நவீன விவசாய முறைகளை அறிந்து கொண்டு உற்பத்தி திறனை பெருக்கி கொள்ள வேண்டும் என்று பேசினார்.

அப்போது வேனாண்மை இணை இயக்குநர் வேலாயுதம், துணை இயக்குநர்கள் விஸ்வநாதன், சீனிராஜ், பஞ்யாத்து தலைவர் ரமணி, வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் உடனிருந்தனர். விழாவில் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அரசு உயர்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறிது நேரம் அறநூல்கள் வழி நடந்து ஒழுக்கத்தை பின் பற்றுமாறு அறிவுரை வழங்கினார்.

Spread the love