June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தின் கீழ் அங்கக சான்றளிப்பு பயிற்சி

புதுக்கோட்டை, ஜூன் 15

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் வாயிலாக செயல்படுத்தப்படும் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் 2022-2023 அங்கக சான்றளிப்பு என்ற தலைப்பில் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த பயிற்சிக்கு அரிமளம் வட்டார வளா்ச்சி அலுவலர் வெங்கடேசன் தலைமை வகித்தார்.

முன்னதாக வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) ரெங்கசாமி, அனைவரையும் வரவேற்று பயிற்சி குறித்து முன்னுரை வழங்கினார். அங்கக வேளாண்மை சான்றின் முக்கியத்துவம் குறித்து விதைச்சான்று துறையின் விதை சான்று அலுவலர் இளஞ்செழியன் கூறியதாவது: அங்கக வேளாண்மையில் ஈடுபட்டுள்ளோர் அங்கக வேளாண்மைச் சான்று வாங்குவது மிகவும் அவசியமாகும். குறிப்பாக இயற்கை விளைபொருட்களை ஏற்றுமதி செய்வோர் இச்சான்றை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். அங்கக சான்று பெற தனி நபராகவோ, குழுவாகவோ பதிவு செய்து கொள்ளலாம். மேலும் கால்நடை பராமரிப்பு, தேனீ வளர்ப்பு, வனப்பொருட்கள் சேகரிப்பு செய்வோரும் பதிவு செய்து பயன் பெறலாம் என்று கூறினார்.

மேலும் சான்று பெற விரும்புவோர் இராசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட மற்றும் இராசாயன நேர்த்தி செய்த விதைகளை கட்டாயம் பயன்படுத்தக் கூடாது. அங்கக சான்று பெற கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய முறைகளையும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.

தோட்டக்கலை உதவி இயக்குநர் நந்தகுமார், தோட்டக்கலை பயிர்களுக்கான அங்கக சாகுபடி தொழில்நுட்பங்களை எடுத்துக் கூறினார். முடிவில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் லெட்சுமிபிரபா நன்றி கூறினார்.

Spread the love