October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விவசாயிகளுக்கு நுண்ணீர்ப் பாசன பயிற்சி

சிவகங்கை, அக்.11

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை – விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் மூலம் நுண்ணீர்ப் பாசனம் பற்றிய விவசாயிகள் பயிற்சி 09.10.2021 அன்று ஆலமங்களம் கிராமத்தில் நடைபெற்றது. நுண்ணீர் பாசனம் அமைக்க விண்ணப்பித்துள்ள 40 விவசாயிகள் இப்பயிற்சியில் கலந்து கொண்டார்கள். சாக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ந.சண்முகஜெயந்தி, இப்பயிற்சியில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மத்திய மாநில திட்டங்களை விரிவாக எடுத்துரைத்தார்.

சிவகங்கை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர், கி.வெங்கடேஷ்வரன், இப்பயிற்சிக்கு தலைமையேற்று நுண்ணீ ர்பாசனத்தின் பயன்கள் அதன் அவசியம் மற்றும் முக்கியத்துவம் பற்றி விரிவாக விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். வேளாண் பொறியியல் துறை உதவி பொறியியலாளர் சுப்பிரமணியன், சிறப்பு பயிற்சியாளராக கலந்து கொண்டு நுண்ணீர்ப் பாசன கருவிகளை எவ்வாறு இயக்குவது பாசன கருவிகளில் ஏற்படும் பிரச்சனைகளை நீக்கும் முறைகள்மற்றும் நுண்ணீர் பாசனம் அமைக்கவுள்ள விவசாயிகளுக்கு மானிய விபரங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மேலும் திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் பற்றி எடுத்துக்கூறி சம்பா நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.361.52/-வீதம் பரீமியத் தொகை செலுத்தி 15.11.2021-க்குள் பயிர் காப்பீடு செய்ய அறிவுத்தினார்.

நெட்டாபாம் நுண்ணீர்ப் பாசன கம்பெனி தங்களுடைய டீலர் மூலம் நுண்ணீர்ப் பாசன கருவிகள் மற்றும் அதன் உதிரி பாகங்களை வைத்து கண்காட்சி அமைத்தது விவசாயிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்புநீர் பாசனகருவிகள் இயங்கும் முறைகள், பழுது ஏற்படாமல் பாசன கருவிகளை இயக்கும் முறைகள், பழுது ஏற்பட்டபின் அவற்றை எவ்வாறு சரி செய்தல்போன்ற விபரங்களை விரிவாக எடுத்துரைக்கப்பட்டு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும், காஜா முகைதீன், உதவி வேளாண்மை அலுவலர், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறையிலிருந்து கலந்து கொண்டு களத்தி அய்யனார் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தால் மரசெக்கு மூலம் கடலை எண்ணெய், நல்ல எண்ணெய் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் உளுந்து தோல் நீக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என்ற விபரத்தினை கூறி வேளாண் பொருட்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்ய விவசாயிகளை ஊக்குவித்தார்.

சாக்கோட்டை வட்டார உதவி வேளாண்மை அலுவலர் எம்.சரவணக்குமார் நுண்ணீர்ப் பாசனம் அமைக்க தேவையான ஆவணங்கள் விபரங்கள் பற்றி எடுத்துரைத்து பயிற்சியின் முடிவில் நன்றியுரை கூறினார். இப்பயிற்சியில் அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் இரா.தமிழ்செல்வி எஸ்தர், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் க.கனிமொழி, மா.விஜய் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு இப்பயிற்சிக்கு ஏற்பாடு செய்தனர்.

Spread the love