கோவை, மார்ச் 8
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பயிர் இனப் பெருக்கம் மற்றும் மரபியல் பயறுவகை துறையில் செயல்பட்டு வரும் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் மூலம், பயறு வகைப் பயிர்களில் தரமான விதை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பப் பயிற்சி திருப்பூர் மாவட்டம், வேளாண்மை அறிவியல் நிலையத்தில் 4.3.22 அன்று நடைபெற்றது. விவசாயிகளுக்கு பயறுவகைப் பயிர்களில் தரமான விதை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பப் பயிற்சியினை அளித்து விதை மாற்று விகிதத்தை அதிகப்படுத்துவதே இப்பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.
திருப்பூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் முனைவர் எம்.கதிரவன், உதவிப் பேராசிரியர் (விதை அறிவியல் மற்றும் தொழில் நுட்பம்) தொழில்நுட்பப் பயிற்சிக்கு வந்த விவசாயிகளை வரவேற்று வரவேற்புரை ஆற்றினார். பயறு வகைத்துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் இரா.பா.ஞானமலர் துவக்க உரை நல்கி தரமான விதை உற்பத்தி மற்றும் பயறு வகை விதை உற்பத்தி பெருக்கம் குறித்தும் விளக்கமளித்தார். முனைவர் பி.ஜெயமணி, பேராசிரியர் (பயிர் இனப் பெருக்கம் மற்றும் மரபியல்) பயறு வகை விதை உற்பத்தியில் இனத் தூய்மைப் பராமரிப்பின் முக்கியத்துவம் மற்றும் பராமரிப்பு வழிமுறைகளைப் பற்றி விளக்கமளித்தார். பயறு வகைப் பயிர்களில் மேற்கொள்ள வேண்டிய உழவியல் தொழில்நுட்பங்கள் பற்றி முனைவர் சு.அனிதா@பானிஷ், உதவிப் பேராசிரியர் (உழவியல்) மற்றும் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றி முனைவர்.லோ.கார்திபா, உதவிப் பேராசிரியர் (பயிர் நோயியல்) விளக்கமளித்தனர்.