May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

விவசாயிகளுக்கு வருமானம் பெருக்கம் தேவைப்படும் புதிய செயல் திட்டங்கள்

கடந்த சில ஆண்டுகளாக நமது நாட்டின் விவசாயிகளின் வருமானத்தை பெருக்க பல்வேறு நலத்திட்டங்கள், புதிய வேளாண் மற்றும் தோட்டக்கலை தொழில்நுட்பங்கள், இணையவழி விரிவாக்க முயற்சிகள் (Cyber Extension) போன்றவை அதிகளவில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் சமீப கால நிதிநிலை அறிக்கையில் முதலீடு இல்லாத இயற்கை வேளாண்மையை (Zero budget based natural farming) மேற்கொள்ள மத்திய அரசின் சார்பில் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தியாவில் உள்ள 15 வேளாண் வானிலை மண்டலங்களில் சுமார் 50 சதவீத நிலங்கள் மழையை நம்பியே உள்ளது. இத்தகைய சூழலில் நமது விவசாயிகளின் வருமானத்தை பெருகக மேற்கொள்ளப்படும் பல நடவபடிக்கைகள் நமது வேளாண் நுகர்வோரின் தேவைகள் அடிப்படையில் இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக இன்றைக்கு இயற்கை வேளாண் இடுபொருட்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் இயற்கை வேளாண்மை பெருவாரியாக நமது நாட்டில் மானவாரி நிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இங்கு சாகுபடி செய்யப்படும் வேளாண் விளை பொருட்களுக்கு வேளாண் சந்தைகளில் நல்ல விற்பனை வாய்ப்புகள் உள்ளது. இதனை திறன்பட மதிப்புக்கூட்டி, இடைத்தரகர்களை தவிர்த்து புதிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்கி சந்தைப்படுத்துவதன் வாயிலாக நம்மால் பசுமைப்புரட்சியின் பயன்களை பெறாத உழவர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக பயன்பெற உதவ முடியும்.
மேலும் வட்டார அளவிலான பரிந்துரைக்கப்பட்ட வேளாண் தொழில்நுட்பங்களைப் பற்றிய விழிப்புணர்வு முயற்சிகள் மற்றும் அதற்கு தேவைப்படும் நிதி உதவிகள், மானியங்கள் வழங்கப்பட்டு இயற்கை முறையில் சிறு தானியங்கள், பயிர்வகைப் பயிர்கள், சிறு பழ வகைகள் (Minor Fruits) சாகுபடி செய்யப்பட்டு, நல்ல முறையில் விற்பனை செய்வதன் வாயிலாக நம்மால் மிகப்பெரிய அளவில் வேளாண் வளர்ச்சி கிராமப்புற தொழில் முன்னேற்றம் மற்றும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி நமது மாநிலத்தையும், நாட்டையும் வளர்ச்சிப்பாதையை நோக்கி கொண்டு செல்ல முடியும்.

கட்டுரை : முனைவர் தி.ராஜ் பிரவின், இணைப்பேராசிரியர் (வேளாண் விரிவாக்கத்துறை) மற்றும் ஒருங்கிணைப்பாளர், விவசாயிகளுக்கான வேளாண் தொழில்நுட்ப தகவல் மையம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

Spread the love