திருநெல்வேலி விதைப்பரிசோதனை ஆய்வகத்தில் ஒவ்வொரு பயிருக்கும் முளைப்புத்திறன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. முளைப்புத்திறன் என்பது விதையின் உயிரும் வீரியமும் கொண்டு இயங்குவதைக் காட்டுவது ஆகும். நல்ல முளைப்புத்திறன் கொண்ட விதைக்குவியல்களிலிருந்து விதைக்கப்படும் விதை மூலம் அதிக பயிர் எண்ணிக்கையில் பயிர்கள் வயலில் செழித்து வளரும். ஆனால் முளைப்புத்திறன் குறைந்த விதைகளை பயன்படுத்தினால் குறைந்த அளவிலேயே பயிர்கள் வளரும். அதனால் பயிர் மகசூல் பாதிக்கப்படும்.விதைச்சட்டம் 1966 பிரிவு 7(பி)ன்படி ஒவ்வொரு பயிருக்கும் குறைந்த பட்ச முளைப்புத்திறன் தரம் நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. மக்காசோளம் – 90 சதம். நெல், எள், கொள்ளு – 80 சதம், சோளம், கம்பு, கேப்பை, வீரிய ஒட்டு பருத்தி, பயறு வகைகள் – 75 சதம், நிலக்கடலை, சூரியகாந்தி – 70 சதம், இரகப் பருத்தி – 65 சதம், மிளகாய் – 60 சதம் ஆகும்.
பயிர்களுக்கு ஏதுவான சூழ்நிலையில் விதையின் கரு முளைவிட்டு பின்னர் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான பாகங்கள் உருவாகி இயல்பான செடியாவதற்குரிய திறனே முளைப்புத்திறன் ஆகும். முளைப்புத்திறன் சோதனையின் போது இயல்பானது, இயல்பற்றது, கடினமானது, உயிரற்றது என 4 வகைப்படுத்தி சோதனை முடிவுகள் அறிவக்கப்படும். இவற்றில் கடினவிதை என்பது விதை உறையின் கடினத்தன்மை காரணமாக நீர் உட்புக இயலாத காரணத்தினால் முளைவிடாமல் இருக்கும். பயறு விதைகள் மற்றும் வெண்டை விதைகளில் இவை தனியாக எடுத்து கணக்கிடப்படும். இவைகள் வயல்களில் முளைப்பதற்கு சாத்தியக்கூறு உள்ளதால் முளைப்புதிறன் கணக்கிடும்போது இயல்பான விதைகளுடன் சேர்த்துக் கணக்கிடப்படும்.
மேற்கண்ட முறைகளின்படி முளைப்புத்திறன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு குறிப்பிட்ட கால அளவுகளில் பயிர்களின் முளைப்புத்திறன் கணக்கிடப்பட்டு சோதனை முடிவுகள் அறிவிக்கப்படும்.