June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வீட்டுத் தோட்ட காய்கறி பயிர்களில் குறைந்த செலவில் பூச்சி மற்றும் பூக்கள் உதிர்தல் மேலாண்மை முறைகள்

இன்றைய காலநிலையில் மக்கள் அனைவரும் இயற்கை முறையில் பயிர் செய்யப்படும் காய்கறி மற்றும் பழ வகைகளேயே விரும்புகின்றனர். இதன் விளைவாக அனைவரும் தங்கள் வீடுகளிலேயே வீட்டுத் தோட்டம் மற்றும் மாடித் தோட்டம் அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசும் பல்வேறு மானியங்களையும் இடுப்பொருட்களையும் வழங்கி வருகின்றது. எனினும் இத்தோட்டங்களை பராமரிப்பதில் மக்களுக்குப ல்வேறு இடர்பாடுகள் இருக்கின்றன. அவற்றுள் சில பூக்கள் உருவாவதில் பிரச்சினை, உருவான பூக்கள் உதிர்தல், பூச்சி மற்றும் நோய் தாக்கம், ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை முக்கிய பிரச்சினைகளாகத் திகழ்கின்றன. இவற்றை எப்படி தடுப்பது என்பது மக்களுக்கு ஒரு பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இதற்கு பதில் கூறும் விதமாக வீட்டில் எளிதாக கிடைக்கும் பொருட்களை வைத்து தயாரிக்கப்படும் தேமோர் கரைசலும், 3G கரைசலும் அமைகின்றன. இவற்றை எப்படி தயாரிப்பது? இவற்றின் பயன்கள் என்ன? உபயோகிக்கும் முறை என்ன? அந்த வழிகளைப் பார்ப்போம்.

தேமோர்கரைசல் என்றால் என்ன?
தேங்காய் பாலையும் வெண்ணெய் நீக்கப்பட்ட மோரையும் ஒன்றாக சேர்த்து செய்யப்படும் கரைசலே தேமோர் கரைசல் எனப்படும்.

தேவையான பொருட்கள் :
மண்பானை, தேங்காய்பால் – 1 லிட்டர், வெண்ணெய் நீக்கப்பட்ட மோர் – 1 லிட்டர்

செய்முறை :
1 லிட்டர் தேங்காய் பால் எடுக்க, ஒரு தேங்காயில் 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து எடுக்கவும். பின்னர் அதனை வடிகட்டி, திப்பி இல்லாத தேங்காய் பாலை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் 1 லிட்டர் அளவு தேங்காய் பாலையும் 1 லிட்டர் அளவு மோரையும் ஒரு மண் சட்டியில் போட்டு நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனுள் காற்று புகாத வகையில் மூடி நிழலான இடத்தில் வைக்கவும். இந்த கரைசலை 5 -6 நாட்கள் நன்றாக புளிக்க வைக்கவும். இதனால் நுண்ணுயிர் சத்துக்கள் அதிகமாக கிடைக்கும்.

உபயோகிக்கும் முறை :
½ லிட்டர் அளவு தண்ணீரில் 15 மிலி தேமோர் கரைசலை கலந்து செடிகளுக்கு ஸ்பிரே செய்ய வேண்டும். சூரிய உதயத்திற்கு முன்பே காலை 6 மணிக்குள் அல்லது மாலை 5 மணிக்கு பிறகு தேமோர் கரைசலை ஸ்பிரே செய்ய வேண்டும்.

பயன்கள் :
பூ உதிர்வதைத் குறைக்கும். மகசூலை அதிகரிக்கும்.

3 G கரைசல் என்றால் என்ன?
இஞ்சி (Ginger), பூண்டு (Garlic) & பச்சை மிளகாய் (Green chilli) ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்து செய்யப்படுவதே 3G கரைச எனப்படும்.

தேவையான பொருள்கள் :
மண்பானை, இஞ்சி – 50 கிராம், பூண்டு – 50 கிராம், பச்சை மிளகாய் – 50 கிராம், மாட்டுகோமியம் – 1 லிட்டர்

செய்முறை :
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகிய மூன்று பொருட்களையும் சிறு துண்டுகளாக வெட்டி அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்து எடுத்த பசையுடன் 1 லிட்டர் மாட்டு கோமியத்தைக்க லக்கவும். இக்கலவையை துணியை வைத்து மூடி ஒரு நாள் வைக்க வேண்டும். மறுநாள் அதனை வடிகட்டி பயன்படுத்த வேண்டும்.

உபயோகிக்கும் முறை :
20 மிலி வடி கட்டிய கரைசலை 1 லிட்டர் தண்ணீருடன் கலந்து செடிகளுக்கு தெளிக்க வேண்டும்,
பயன்:
3G கரைசல் தெளிப்பதால் மாவுப் பூச்சிகள், இலைப்பேன், வண்டுகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தலாம். எனவே குறைந்த செலவில் மேலாண்மை நடைமுறையை ஊக்குவிக்க இன்றைய விவசாயிகள், வீட்டு இல்லத்தரசி மற்றும் பெரியவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.

கட்டுரையாளர்கள் : திவ்யா திருநாவுக்கரசு (இறுதி ஆண்டு மாணவி பி.எஸ்சி.,) மற்றும் தஞ்சாவூர் ஆர்.வி.எஸ்., விவசாயக் கல்லூரியின் தஞ்சாவூர் தொகுதி மாணவிகள், தஞ்சாவூர்.

Spread the love