August 13, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வீணாகும் வெற்றிலை நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

தர்மபுரி, மே 15

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில், அறுவடை செய்யப்படாமல் விவசாய நிலங்களில் வெற்றிலை வீணாகி வருகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை, தென்னை, பருத்தி, மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பாப்பிரெட்டிப்பட்டி, மல்லாபுரம், வேப்பிலைப்பட்டி, அய்யம்பட்டி, சில்லாரஹள்ளி, நத்தமேடு உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் கருப்பு வெற்றிலையை அதிகளவு சாகுபடி செய்து வருகின்றனர். ஆண்டு முழுவதும் அறுவடை செய்யபடும் வெற்றிலைகளை சேலம், பவானி, கோவை, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த காலங்களில், 100 எண்ணிக்கை கொண்ட வெற்றிலை ஒரு கட்டு, ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது ஊரடங்கு அமலுக்கு வந்த பிறகு திருமணம், வளைகாப்பு, மஞ்சள் நீராட்டு விழா, கோவில் விழாக்கள் நடத்த தடை விதித்துள்ளதாலும், தேவை குறைந்துள்ளது. இதனால், வெற்றிலை விலை சரிந்து ஒரு கட்டு வெற்றிலை, ரூ.15 முதல் ரூ.20 வரை மட்டுமே விலைபோகிறது. மேலும் வெற்றிலையை பறிக்க கூலி ஆட்கள் வராததால், விவசாயிகள் வெற்றிலையை பறிக்காமல் விட்டு விட்டனர். இதனால் நிலங்களில் வெற்றிலைகள் வெம்பி பழுத்து கருகி உதிர்ந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், தமிழக அரசு தங்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டுமென பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Spread the love