புது தில்லி, மே 10
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு குழாய்கள் மீது விதிக்கப்படும் மிகை குவிப்பு தடுப்பு வரியை அக்டோபர் வரை மத்திய அரசு நீட்டித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இரும்பு, எஃகு உள்ளிட்ட உலோகங்களால் செய்யப்பட்ட குழாய்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. அதனால் உள்ளூர் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அப்பொருள்களின் இறக்குமதி மீது மிகைகுவிப்பு தடுப்பு வரி கடந்த 2016ம் ஆண்டு விதிக்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு விதிக்கப்பட்ட அந்த வரியானது மே மாதத்துடன் நிறைவடைகிறது. இந்நிலையில், மிகைகுவிப்பு தடுப்பு வரியை அக்டோபர் வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய மறைமுக-சுங்க வரிகள் வாரியம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இரும்பு, எஃகு குழாய்களின் இறக்குமதி மீது விதிக்கப்பட்டு வரும் மிகைகுவிப்பு தடுப்பு வரி அக்டோபர் 31ம் தேதி வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வர்த்தக தீர்வுகள் இயக்குநரகம், எஃகு குழாய்கள் மீது விதிக்கப்பட்டு வரும் மிகைகுவிப்பு தடுப்பு வரி குறித்த ஆய்வு மேற்கொண்டது. அதையடுத்து, மிகைகுவிப்பு தடுப்பு வரியை ரத்து செய்யக் கூடாது என்று அந்த இயக்குநரகம் மத்திய நிதியமைச்சகத்துக்குப் பரிந்துரைத்திருந்தது.
அதனடிப்படையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு குழாய்கள் மீதான மிகைகுவிப்பு தடுப்பு வரி நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.