August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வேளாண்மை கருவிகள் மற்றும் புதிய இயந்திரங்கள் செயல்முறை பயிற்சி

சிவகங்கை, ஜூலை 2

சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை வட்டாரத்தில் இயங்கி வரும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை – விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் மூலம் வேளாண் பொறியியல் துறையினரால் வேளாண்மை கருவிகள் மற்றும் புதிய இயந்திரங்கள் பற்றிய விவசாயிகள் பயிற்சி 29.6.2022 அன்று சொக்கலிங்கம்புதூர் கிராமத்தில் நடைபெற்றது. சொக்கலிங்கம்புதூர் கிராமத்தில் ஆர்வமுள்ள 40 விவசாயிகள் இப்பயிற்சியில் கலந்து கொண்டார்கள்.

சாக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ந.சண்முகஜெயந்தி, இப்பயிற்சிக்கு தலைமையேற்று கலந்து கொண்ட அனைவரையும் வரைவேற்றார். மேலும் வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மத்திய மாநில திட்டங்களை விரிவாக எடுத்துரைத்தார். தற்பொழுது நிலவி வரும் கூலியாட்கள் பற்றாக்குறை மற்றும் அதிகமான சாகுபடி செலவு ஆகிய காரணங்களால் விவசாய நிலங்கள் தரிசாக மாறி கொண்டு வருகின்றன. அதனால் விவசாயத்தில் வேளாண் கருவிகளின் உபயோகம் இல்லாமல் இலாபம் என்பது சாத்தியமில்லை. விதைப்பு முதற்கொண்டு அறுவடை வரை அனைத்து வேலைகளுக்கும் புதிய வேளாண் கருவிகள் வந்துவிட்டன. அனைத்து வேளாண் இயந்திரங்களுக்கும் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் மானியங்கள் கிடைக்கின்றன. அதனால் விவசாயிகள் வேளாண் கருவிகளின் பயன்கள் அதன் அவசியம் மற்றும் முக்கியத்துவம் பற்றி தெரிந்த கொண்டு பயனடைய கேட்டுக் கொண்டார்.

வேளாண் பொறியியல் துறை உதவி பொறியியலாளர் சுப்பிரமணியன், சிறப்பு பயிற்சியாளராக கலந்து கொண்டு நுண்ணீர்ப் பாசன கருவிகளை எவ்வாறு இயக்குவது பாசன கருவிகளில் ஏற்படும் பிரச்சனைகள் அவற்றை நீக்கும் முறைகள் மற்றும் நுண்ணீர் பாசனம் அமைக்கவுள்ள விவசாயிகளுக்கு மானிய விபரங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். சாக்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் மு.சரவணன், சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்புநீர் பாசன கருவிகள் அமைக்க வழிமுறைகள், பேட்டரி மூலம் இயங்கும் தெளிப்பான்கள், கைத்தெளிப்பான்கள் அவற்றை எவ்வாறு மானிய விலையில் விவசாயிகள் வாங்கி பயனடைவது? போன்ற விபரங்களை விரிவாக எடுத்துரைத்தார்.

சரவணன், பூமிகா மோட்டாஸ் நிறுவன உரிமையாளர், காரைக்குடி, இப்பயிற்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தற்பொழுது விவசாயிகள் அதிகமாக பயன்படுத்தும் வேளாண் இயந்திரங்கள் அவற்றின் பயன்கள் மற்றும் மானிய விபரங்களை பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மேலும், காஜா முகைதீன், உதவி வேளாண்மை அலுவலர், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறையிலிருந்து கலந்து கொண்டு வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்ய வேளாண் இயந்திரங்களின் பங்கு எவ்வாறு உள்ளது. சாக்கோட்டைமற்றும் கல்லல் வட்டாரங்களிலுள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் வழியாக மர செக்கு மூலம் கடலை எண்ணெய், நல்ல எண்ணெய் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் உளுந்து தோல் நீக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என்ற விபரத்தினை கூறி வேளாண் பொருட்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்ய விவசாயிகளை ஊக்குவித்தார்.

சாக்கோட்டை வட்டார உதவி வேளாண்மை அலுவலர் கே.கணேசன், நுண்ணீர்ப் பாசனம் அமைக்க வேளாண் கருவிகள் மானிய விலையில் வாங்க தேவையான ஆவணங்கள் விபரங்கள் பற்றி எடுத்துரைத்து பயிற்சியின் முடிவில் நன்றியுரை கூறினார். இப்பயிற்சியில் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் இரா.தமிழ்செல்வி எஸ்தர், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் க.கனிமொழி, மா.விஜய் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு இப்பயிற்சிக்கு ஏற்பாடு செய்தனர்.

Spread the love