திருப்பூர், மார்ச் 16
வேளாண் கல்லூரி மாணவர்கள் சார்பில் விவசாய பகுதியில் தொழு உரம் தயாரித்தல் பயிற்சி முகாம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், சென்னிமலை வட்டம், தண்ணீர் பந்தல் கிராமத்தில் வசிக்கும் விவசாயிகளை பொள்ளாச்சியில் உள்ள வாணவராயர் வேளாண்மைக் கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவர்கள், சென்னிமலை வேளாண்மை உதவி இயக்குநர் ம.சாமுவேல், ஆலோசனையின் கீழ் 11 பேர் கொண்ட குழு கபிலன், கார்த்திக், கீர்த்திக்குமார், கௌசிக், கிருஷ்ணகுமார், மதன்ராஜ், முகம்மது தாவூத் இப்ராஹிம், முகுந்தன், பழனி துரை, பருவத ராஜ் ஆகியோர்கள் கிராமப்புற வேளாண் அனுபவப் பயிற்சியின் ஒரு பகுதியாக “தொழு உரம் தயாரித்தல்” செய்முறை விளக்கம் அளித்தனர்.
பண்ணை விலங்குகளுடைய சாணம் மற்றும் கால்நடை தீவனக்குப்பைகளின் சிதைக்கப்பட்ட கலவை தான் பண்ணை உரம். முதலில் 6- 7.5 மீ நீளம், 2 மீ அகலம், 1 மீ ஆழத்திற்கு ஒரு குழியைத் தோண்ட வேண்டும். பிறகு கிடைக்கக்கூடிய வேளாண் குப்பை மற்றும் கூளங்களை மண்ணுடன் கலந்து சிறுநீரை உறிவதற்காக தொழுவத்தில் பரப்பி வைக்க வேண்டும். அடுத்த நாள் காலையில் இக்குப்பையினை சாணத்துடன் சேர்த்து குழியில் இடவேண்டும். இதன் ஒரு பகுதி தரைமட்டத்திற்கு மேல் 45-60 செ.மீ வரை நிறைக்க வேண்டும். குவியலுடைய மேற்பகுதி கோபுரம் போல் ஆதல் வேண்டும். பின்னர் சேற்று மண் குழம்பு சாணத்துடன் குவியலை பூச வேண்டும். காரைப் பூச்சுப் பிறகு 4-5 மாதத்திற்குள் எரு தயார் நிலைக்கு வரும். இவ்வாறு நன்றாக மட்கிய பண்ணை உரத்தை விதைப்பதற்கு முன்பே இடுதல் வேண்டும். இவ்வுரத்தில் 30% தழைச்சத்து, 60-70% மணிச்சத்து, 70% சாம்பல் சத்து கிடைக்கும். மேலும் மாணவர்கள் அதன் பயன்கள் மற்றும் பயன் படுத்தும் முறைகளை விவசாயிகளிடம் தெளிவாக எடுத்துரைத்தனர்.
Spread the love