June 24, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வேளாண் பயிர்களில் துத்தநாக சத்து மேலாண்மை

சிவகங்கை, ஏப்.29

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ச.மனோகரன், வேளாண்ப் பயிர்களில் துத்தநாக சத்து மேலாண்மை பற்றிய தொழில்நுட்ப செய்தியில் கூறியுள்ளதாவது, துத்தநாகம், தாமிரம், இரும்பு, மாங்கனீசு, போரான், மாலிப்டினம் போன்றன பயிர்களுக்கு மிகக் குறைந்த அளவில் தேவைப்பட்டாலும் பயிர் வளர்ச்சி மற்றும் மகசூலில் முக்கிய பங்கு வகிப்பதால் இவை நுண்ணூட்டங்கள் என்று கருதப்படுகின்றது. மண்ணில் இரும்பு, மாங்கனீசைத் தவிர மற்ற நுண்ணூட்டங்கள் அளவு மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. எனவே குறைபாட்டு அறிகுறிகளும் மிகுந்த அளவில் காணப்படுகின்றது.

மண்ணின் கார அமில நிலையானது 5-6 வரை இருக்கும் போது, தாமிரம், துத்தநாகம், மாங்கனீசு, போரான் போன்ற நுண்ணூட்டங்களின் அளவு, பயிர்களுக்கு கிடைக்கும் நிலையில் இருக்கும். ஆனால் கார அமில நிலை 7.5க்கு மேல் மிகும் போது நுண்ணூட்டங்கள் பயிருக்கு கிடைக்கும் அளவு குறைந்து கொண்டே வரும். மண்ணில் அங்ககப் பொருட்களின் அளவு குறைவாக இருப்பின், மண் வாழ் உயிர்களின் எண்ணிக்கை குறைவதோடு, ஊட்டங்களை பயிர் எடுத்துக்கொள்ளும் நிலையும் மாறுபடுகின்றது. சுண்ணாம்புச்சத்து அதிகமாக இருப்பின் நுண்ணூட்டங்களின் குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

துத்தநாகம்
எல்லா தாவரங்களுக்கும் மணிச்சத்தின் தேவையில் நூற்றில் ஒரு பங்கு துத்தநாகச் சத்து தேவைப்படுகிறது. மண்ணின் கார அமில நிலை 6 முதல் 8 வரை உள்ள நிலங்களில் துத்தநாகப் பற்றாக்குறை தென்படுகிறது. களர் நிலங்களிலும், மணிச்சத்து அதிகமாக உள்ள நிலங்களிலும், சுண்ணாம்புச் சத்து அதிகமாக உள்ள மண்ணிலும் இச்சத்து பயிர்களுக்குக் கிடைப்பதில்லை.
பயிருக்கு தேவையான நுண்ணூட்டங்களில் துத்தநாகம் மிகவும் முக்கியமானது. இவை பயிர்களின் திசுக்களிலுள்ள பல்வேறு நொதிகளிலும் மற்றும் உயிரணுக்களில் உள்ள ரைபோ நியூக்கிலிக் அமிலத் தயாரிப்பிலும் பங்கு பெறுகின்றது. செல்களில் உள்ள சைட்டோபிளாசத்தின் ரைபோசு என்ற சர்க்கரைப் பொருளின் அளவை கட்டுப்படுத்ததுத்தநாகம் தேவைப்படுகின்றது. பயிர்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ஆக்ஸின் தயாரிப்பதற்கும், பயிர்களுடைய வேர்களின் நீர் கிரகிக்கும் தன்மைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் தேவைப்படுகிறது.

குறைபாட்டினால் தோன்றும் அறிகுறிகள்
ü இளந்தளிர் இலைகளில் நடுநரம்பு அடிபுறத்தில் வெளுத்து காணப்படும்.
ü இலைகளின் அளவுசிறுத்துபயிர் வளர்ச்சி குன்றும்
ü இலைகளின் மஞ்சள் நிறக்கோடுகள் விரிந்து பரவி, பின்பு இலை முழுவதும் வெள்ளையாகிவிடும்.
ü இலைகள் மஞ்சளாகவும் மிருதுத்தன்மை இழந்து, தடித்து இலைகளின் ஓரங்கள் மேற் பக்கமாக சுருண்டு காணப்படும்.

நெல்
· நெற்பயிரில் துத்தநாகக் குறைபாடு நாற்று நட்டு 3-லிருந்து 4 வாரத்திற்குள் காணப்படும்
· இளம் இலைகளின் நடுநரம்பு அடிப்புறத்திலிருந்து வெளுத்து காணப்படும்.
· மேல்புறம் மற்றும் நடுப்பகுதி இலைகளில் பழுப்பு நிறப்புள்ளிகள் தோன்றும், இப்புள்ளிகள் ஒன்று சேர்ந்து இலை முழுவதும் பழுப்படைந்து காய்ந்துவிடும்.
· பயிர்கள் சீராக வளராமல் திட்டுதிட்டாக வளர்ச்சி குன்றி காணப்படும். ஆனால் பயிர்கள் வளரும் பொழுது இந்த குறைபாட்டு அறிகுறிகள் மறைந்தாலும் மகசூல் குறையும்.

சோளம், மக்காச்சோளம்
· தானியப் பயிர்களின் இளம் பருவத்தில் 2-வது அல்லது மூன்றாவது இலையின் அடிப்புறம் வெளிறிய, மஞ்சள் நிறத்துடன் காணப்படும்.
· இலைகள் அடிப்புறத்திலிருந்து மேல் நோக்கி வெளுத்து காய்ந்து விடும். நுனி இலைகள் சரிவர விரியாது.
· சோளத்தில் துளிர் மற்றும் நடுப்பகுதி இலைகளில் பழுப்பு மற்றும் செந்நிறப் புள்ளிகள் தோன்றும்.
· செடிகளின் மேல்புறத்தில் கணு இடைவெளி குறையும். கதிர்கள் தோன்ற அதிக நாட்கள் ஆகும். செடிகளின் வளர்ச்சி குன்றும்.

பயிறுவ கைப் பயிர்கள்
· பயிறு வகைப் பயிர்களில் விதைத்து இரண்டு வாரங்களில் பற்றாக்குறை அறிகுறிகள் காணப்படும்.
· துளிர் மற்றும் நடுப்பகுதியில் உள்ள இலைகளில் நரம்புகளுக்கு இடையே உள்ள பகுதி வெளுத்துவிடும்.
· வெளுத்த பகுதி மற்றும் இலைகளின் அடிப்புறத்தில் கரும் பழுப்பு நிறப் புள்ளிகள் தோன்றும்.
· பின் இலைகள் உதிரும், பூக்கள் மற்றும் காய்களின் எண்ணிக்கை குறையும்.

எண்ணெய் வித்துப்பயிர்கள்
· நிலக்கடலையில் 3, 4 ஆவது இலைகளில் குறைபாட்டு அறிகுறிகள் தோன்றும்.
· இலைகளில் இளம் மஞ்சள் நிறத்துடன் பழுப்பு நிறப் புள்ளிகள் காணப்படும். இலைகள் காய்ந்துஉதிரும்.
· எள் பயிரில் நடுப்பகுதி இலைகளின் நரம்புகளுக்கிடையே உள் பகுதி வெளுத்து மஞ்சள் நிறமாகக் காணப்படும்.
· நுனி இலைகளின் ஓரங்களில் சிவப்பு நிறப்புள்ளிகள் காணப்படும். இலைகள் சிறுத்துவிடும்.
· சூரியகாந்தியில் 5, 6 ஆவது இலைகள் வெளுத்து நரம்புகளுக்கிடையே பழுப்பு நிறப்புள்ளிகள் தோன்றும், திசுக்கள் அழுகி இலைகள் உதிரும்.

பருத்தி
· இலைகளின் நரம்புகளுக்கிடையே உள்ள பகுதி மஞ்சள் நிறத்துடனும் இலைகள் சிவப்பு நிறத்துடனும் காணப்படும்.
· இலைகள் தடித்து ஓரங்கள் மேல் நோக்கி குவிந்து காணப்படும். இலைகள் காய்ந்து உடையும்.
· செடிகளின் வளர்ச்சி குன்றிகாய் பிடிப்பது குறையும். காய்கள் வெடிப்பதும் பாதிக்கப்படும்.

கரும்பு
· இலைகளின் நடு நரம்புகளுக்கு அருகில் உள்ள பகுதி வெளுத்து விடும்.
· அடிப்புற இலைகளின் அடிப்பாகத்தில் இந்த வெளுப்புத் தோன்றி மேல் நோக்கி பரவும். கணு இடைவெளி குறையும்.
· மஞ்சள் செடிகளில் இலை நரம்புகளுக்கு இடையே உள்ள பகுதிகள் வெளுத்து விடும்.
· இலைகளின் ஓரங்களிலிருந்து பழுப்பு நிறப் புள்ளிகள் தோன்றி அழுக ஆரம்பிக்கும். செடிகளின் வளர்ச்சி குறையும்.

துத்தநாக சத்து உரங்கள்

துத்தநாக உரங்கள் ஊட்டக் கிடக்கை (சதம்)
துத்தநாக சல்பேட் (Hepta Hydrate) 21.0
துத்தநாக சல்பேட் (Mono Hydrate) 33
துத்தநாக ஆக்சைடு (Suspension Concentrate) 39.5
துத்தநாக பாலிபாஸ்பேட் 16
துத்தநாக கீலேட் (ZnEDTA) 12
துத்தநாக கிலேட் (ZnHEDP) 17

உரப் பரிந்துரை

பயிர்கள் துத்தநாகசல்பேட் (Hepta Hydrate) உர அளவு / எக்டர்

(அ) அடியுரம்
நெல், மக்காச்சோளம், கோதுமை, சோளம், நிலக்கடலை, சூரியகாந்தி, பயிறு வகைகள், வாழை, கத்தரி 25 கிலோ

கரும்பு, மஞ்சள், பருத்தி 50 கிலோ

(ஆ) இலை வழி தெளிப்பு
அனைத்து பயிர்களுக்கும் குறைபாட்டு அறிகுறிகள் தெரிந்தவுடன் 0.5 சதம் கரைசல் ஒருவார இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.

(இ) விதை, நாற்று நேர்த்தி நெல் 2-4 சதம் கரைசல்

பயிர்களுக்குப் பேரூட்ட உரங்களைப் போட்ட பிறகு துத்தநாக சல்பேட்டினை சம அளவு மண்ணுடன் கலந்து ஒரே சீராக நிலத்தின் மேல் தூவி கலந்து விடவேண்டும். யூரியாவுடன் துத்தநாக சல்பேட்டினைக் கலக்க கூடாது. ஏனெனில் நீர்த்து கட்டியாகி விடவாய்ப்பு உண்டு. நாற்று நடுவதற்கு அல்லது விதைப்பதற்கு முன்பு இட வேண்டும். துத்தநாகக் குறைபாட்டிற்கு துத்தநாக சல்பேட் இடுவதால் பல்வேறு பயிர்களின் விளைச்சல் சாதாரணமாக 10 சதத்திலிருந்து 25 சதம் வரைஅதிகரித்தது. விளைச்சல் அதிகரிப்பு மண்ணின் தன்மைகளுக்கேற்ப வேறு படுகின்றது. குறிப்பாக மண்ணின் நயம் மற்றும் இயக்க நிலை, பயிர்களுக்கு கிடைக்கும் துத்தநாகத்தின் அளவினை வேறுபடுத்துகின்றன.

துத்தநாகசல்பேட் கரைசலைத் 0.5 சதம் தெளிக்க 5 கிராம் துத்தநாக சல்பேட்டை ஒ ருலிட்டர் தண்ணீரில் கரைக்கவேண்டும். அல்லது ½ கிலோ துத்தநாக சல்பேட்டினை 100 லிட்டர் தண்ணீரில் கரைத்து பயன்படுத்தலாம். பயிரில் துத்தநாகக் குறைபாடு தெரிந்தவுடன் இக்கரைசலை ஒரு வார இடைவெளியில் 3 முறை தெளிக்க வேண்டும். விதைத்து அல்லது நாற்று நட்டு 30-ஆவது நாளில் தெளிக்கலாம். பிறகு ஏழிலிருந்து 10 நாட்கள் இடைவெளியில் மீண்டும் இரண்டு முறை தெளிக்க வேண்டும். இளம்பருவத்தில் தெளித்தால் தான் நல்ல பயன் கிடைக்கும். செடிகள் நன்றாக நனையுமாறு, காலையில் அதாவது வெய்யிலுக்கு முன்பு தெளிக்க வேண்டும். பயிர்களின் மீது கரைசலைத் தெளிப்பதைக் காட்டிலும் அடியுரமாக இடுவது நல்ல பலனைத் தரும். ஆனால் பயிர்களில் காணப்படும் துத்தநாகக் குறைபாட்டினை நீக்குவதற்கு இலை வழி கரைசல் தெளிப்பது நல்ல பலனைத் தரும்.

Spread the love