May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வேளாண் பல்கலை மாணவர்களுக்கு கிராமபுற வேளாண் பணி

கோவை, மார்ச் 14

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் ஈச்சங்கோட்டை கல்லூரி மாணவர்கள் கிராமபுற வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ் மணிகண்டம் பகுதியில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஈச்சங்கோட்டை கல்லூரி மாணவர்கள் சார்பில், அந்தநல்லூர் வட்டாரத்தில் உள்ள குழுமணி ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் முதலாவதாக திருச்சி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் முருகேசன், விவசாயிகளுடன் கலந்துரையாடி அவர்களின் பயிர் சாகுபடிக்கு உள்ள தடைகளுக்கு தீர்வுகளை வழங்கினார். மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி விரிவாகவும், அவற்றைப் பயன்படுத்துமாறும் பரிந்துரைத்தார். இரண்டாவதாக மணிகண்டம் வேளாண் உதவி இயக்குனர் பசீரியா, நஞ்சை தரிசுக்கு பின் உளுந்து சாகுபடி முறையினைப் பற்றி விவரித்தார். இதில் மகசூலை அதிகரிக்க விவசாயிகள் 30 செ.மீ.× 10 செ.மீ இடைவெளியில் சரியான இடைவெளியை பராமரிக்க வேண்டும் என்றும், 10 நாட்கள் இடைவெளியில் நீர் பாய்ச்ச வேண்டும் என்றும், 15 நாட்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அடுத்தாக உழவர் பயிற்சி மையத்தின் துணை இயக்குநர் மோகன், தாவர வளர்ச்சி ஊக்கிகளின் முக்கியத்துவத்தை பற்றி விவரித்தார். இதில் NAA (நாப்தலின் அசிட்டிக் அமிலம்) 40 mg/லிட்டர் மற்றும் சாலிசிலிக் அமிலம் 100 mg/லிட்டர் பூக்கும் முன் ஒரு முறையும் அதன்பின் 15 நாட்களில் மற்றொரு முறையும் இலைவழி தெளிக்கவும் என்றுக் கூறினார். மேலும் பூ உதிர்தலை தடுக்க மற்றும் அதிக மகசூல் பெற பல்ஸ் வன்டர் (pulse wonder) ஹெக்டேருக்கு 5 kg என்ற அளவில் தெளிக்கவும் எனக் கூறினார். அடுத்தாக பயிர் வினையியல் உதவி பேராசிரியர் நித்திலா, நஞ்சை தரிசுக்கு பின் உளுந்து சாகுபடிக்கு ஏற்ற ரகமான ADT 3, ADT 6, VBN 9 பற்றி விவரித்தார். மேலும் பூஞ்சைக் கொல்லிகள் மற்றும் உயிர் உரம் (ரைசோபியம்) பயன்படுத்தி விதை நேர்த்தி செய்யவும் மேலும் ஊட்டச்சத்து மேலாண்மைக்கு – 0.5% துத்தநாக சல்பேட் மற்றும் 0.5% இரும்பு சல்பேட் இலைகளில் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இறுதியாக பயிர் பாதுகாப்பு துறை சார்ந்த சீபா ஜெஸ்மின், பயிர் பாதுகாப்பின் பரிணாம வளர்ச்சியை விளக்கினார். அதாவது பூச்சி ஒழிப்பு, கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை பற்றி விளக்கினார். மேலும் காய் துளைப்பான்களைக் கட்டுப்படுத்த விவசாயிகள் வேப்ப எண்ணெய் அல்லது அசாடிராக்டின் 1% EC @2ml/லிட்டர் பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டது மற்றும் வெள்ளை ஈக்களுக்கான மஞ்சள் ஒட்டும் பொறிகள் மற்றும் அமெரிக்க காய்ப்புழுவிற்கு பெரோமோன் பொறிகளை பயன்படுத்த வேண்டும் என்றுக் கூறினார்.

Spread the love