வேளாண் மாணவர்கள் வயல்வெளிப் பள்ளியில் விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
ஈரோடு மார்ச் 16
ஈரோடு மாவட்டம், நம்பியூர் வட்டாரம், எலத்தூர் கிராமத்தில் கத்தரிக்காய் சாகுபடி தொடர்பான விவசாயிகள் வயல் வெளிப்பள்ளி நடத்தப்பட்டது. இப்பயிற்சிக்கு 25க்கும் மேற்பட்ட உழவர்கள் கலந்து கொண்டனர். இதனை தலைமை ஏற்று நடத்திய வேளாண்மை உதவி இயக்குநர் முரளி கத்தரிக்காய் சாகுபடியில் நவீன தொழில் நுட்பங்களை கையாளுவதன் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறினார். இப்பள்ளிக்கு சிறப்பு பயிற்சியாளராக வந்திருந்த முன்னாள் வேளாண் உதவி இயக்குநர் மாரியப்பன் விதைகளை விதை நேர்த்தி செய்தல் மண் மாதிரிகள் எடுத்தலின் அவசியம் சரியான உர மேலாண்மை சாகுபடி செய்தலின் பயன்கள் குறைந்த செலவில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை ஆகியவற்றை குறித்து விரிவாக எடுத்துக்கூறி உழவர்களுக்கு பயிற்சி அளித்தார்.
கத்தரிக்காய் வயலில் நேரடியாக நடைபெற்ற இப்பயிற்சியில், நன்மை மற்றும் தீமை செய்யும் பூச்சிகளை எப்படி கண்டறிவது என்பதை பூச்சி வலைகள் உபயோகித்து விளக்கப்பட்டது. இப்பயிற்சி பள்ளியில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் கீர்த்திவர்மன், செல்வகனேஷ், மாதேஷ், தேவர்தாசன், பார்த்திபன், ராஜ நிர்மல், விக்னேஷ், விஜய், கௌரிசங்கர், தவலகிரி விகாஸ்ரெட்டி, கல்லம்பள்ளி யஸ்வந்த்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு, கத்தரிக்காய் விதைநேர்த்தி செய்தல், மண்மாதிரிகள் எப்படி எடுப்பது என்பது குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். மேலும், வரைபடங்கள் மூலம் வயலில் நன்மை செய்யும் பூச்சிகள் எவை, தீமை செய்து பயிர்களை அழிப்பவை எவை என்பதை தெளிவாக விளக்கிக் கூறினர். இப்பயிற்சியின் போது நம்பியூர் வேளாண்மை அலுவலர் அரசின் மானிய திட்டங்கள் பற்றி எடுத்துக்கூறி, தொடர்ந்து குறுகிய கால இடைவெளியில் இவ்வயல் வெளிப்பள்ளி நடத்தப்பட்டு அறுவடை வரை அனைத்து தொழில் நுட்பங்களும் கற்றுத் தரப்படும் என்றும் கூறினார். இப்பகுதி உதவி தொழில்நுட்ப அலுவலர் ஞானசேகரன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.