October 23, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வேளாண் விஞ்ஞானி மற்றும் விரிவாக்க அலுவலர்கள் விவசாயிகளுடன் இணைந்து வயலாய்வு

சிவகங்கை, அக்.7

சிவகங்கை மாவட்டம், கல்லல் வட்டாரம் விரிவாக்க சீரமைப்பு திட்டம்-அட்மா திட்டத்தின் கீழ் கல்லல், குருந்தம்பட்டு மற்றும் அ.கருங்குளம் ஆகிய கிராமங்களில் வேளாண் விஞ்ஞானி மற்றும் விரிவாக்க அலுவலர்கள் விவசாயிகளுடன் இணைந்த வயலாய்வு நிகழ்ச்சி கல்லல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சு.அழகுராஜா, தலைமையில் நடைபெற்றது. குன்றகுடி, வேளாண் அறிவியல் நிலையம் உதவி பேராசிரியர் விமலேந்திரன், கலந்து கொண்டு தொழில்நுட்ப கருத்துகளை விவசாயிகளுக்கு வழங்கினார்·

நிலக்கடலையில் பின்கருகல் நோய்- செடியில் இலையில் அடிப்பாகத்தில் கருப்பு நிற புள்ளிகள் தோன்றி இலை முழுவதும் பரவி காய்ந்து சருகாக காட்சியளிக்கும். இதற்கு மேலாண்மையாக ஏக்கருக்கு 200 கிராம் மாங்கோசெப் மருந்தை 200 லி தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும். காய் பிடிப்பு அதிகமாக ஒரு எக்டருக்கு 400 கி வீதம் 40-45வது நாளில் மண்ணைக் கொத்தி இட்டு மண் அணைக்க வேண்டும். விதைத்த 30-45வது நாளில் இரண்டாவது கைக்களை எடுத்த பின்பு மண் அணைப்பதன் மூலம் விழுதுகள் மண்ணிற்குள் சென்று காய்பிடிப்பு அதிகமாவதால் மகசூல் அதிகரிக்க உதவுகிறது.

நாற்றாங்காலில் இலைபேன் பூச்சித் தாக்குதல்-நாற்றின் நுனிப்பகுதி கருகி இலையானது மஞ்சள் நிறமாக தோன்றும் அதற்கு ஒரு சென்ட் நாற்றாங்காளுக்கு 10 மிலி என்ற அளவில் 3 சதவீத வேப்ப எண்ணையுடன் 10கி ஒட்டும் திரவத்தை சேர்த்து இலைப்பரப்பில் தெளிப்பதால் இலைபேன்கள் கசப்பு தன்மை காரணமாக ஓடிவிடும்.

தென்னையில் சிவப்பு கூண் வண்டு பூச்சித் தாக்குதல்-ஓட்டைகள் வழியாக உள்ளே சென்று இளந்தண்டுகளை தின்றுவிடுவதால் மரம் வளராமல் கொண்டைப்பகுதி முறிந்து விழுந்து மரம் பட்டுவிடும். அதற்கு பாதிக்கப்பட்ட மரங்களை உடனே அகற்ற வேண்டும், பிற மரங்களில் பரவாமல் இருக்க மட்டையின் உட்புறத்தில் வேப்ப எண்ணையை மணலுடன் கலந்து இட வேண்டும். மரத்தில் துவாரங்கள் இருப்பின் கார்போரைல் (20 கி/லி) துளையில் ஊற்றிவிட்டு துளையயை அடைக்க வேண்டும்.

மேலும் தென்னையில் ரூகோஸ் வெள்ளை ஈ தாக்கினால் இலையின் அடிப்பாகத்தில் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் பூஞ்ஞான் போன்று ஒட்டிகொண்டு நாளடைவில் இலைகள் பட்டு மட்டை விழுந்து விடும் .அதற்கு விசைத்தெளிப்பான் கொண்டு நீரை இலையில் அடிப்பகுதியில் பீய்ச்சி அடிக்க வேண்டும்.

கரும்பில் இடைக்கணுப் புழு பூச்சித் தாக்குதல்-இடைப்பகுதியில் தாக்கப்பட்ட கணுக்கல் சுருங்கி காய்ந்து விடும். அதற்கு நட்ட 150 மற்றும் 216 வது நாளில் தோகையை உரிக்கவேண்டும் இப்பூச்சியின் முட்டைகள் இலைப்பரப்பில் ஒட்டிக்கொண்டிருக்கும். மேலும் இனக்கவர்ச்சிப் பொறியை 10 எண்ணிக்கையில் வைக்க வேண்டும்.

இவ்வாறான தொழில்நுட்ப கருத்துகளை வட்டார அலுவலர்களுடன் இணைந்து கலந்தாய்வு செய்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துணை வேளாண்மை அலுவலர் எஸ் சேகர், உதவி வேளாண்மை அலுவலர் பு.பாண்டீஸ்வரன் கலந்து கொண்டனர். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் அ.சூர்யா, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் த.அருண்மொழி, நா.குருதாஸ் ஏற்பாடு செய்திருந்தனர்.

Spread the love