January 24, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தேனி, மே 19

தொடர்ந்து மழை பெய்து வருவதால், செவ்வாய்க்கிழமை வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, விநாடிக்கு 1,081 கன அடியாக உயர்ந்தது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்டது வைகை அணை. இந்த அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கான முக்கிய நீராதாரமாக திகழ்கிறது. கடந்த சில மாதங்களாக அணையிலிருந்து கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால், தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 60 அடியாக உள்ளது.

தற்போது, டவ்-தே புயல் காரணமாக முல்லைப் பெரியாறு அணை பகுதியில் அதிகளவில் மழை பெய்து வருகிறது. மேலும், மேற்கு மலை தொடர்ச்சியை ஒட்டியுள்ள தேனி மாவட்ட நீர்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், போடி கொட்டகுடி ஆறு, முல்லைப் பெரியாறு, மூலவைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

இதனால், செவ்வாய்க்கிழமை காலை வைகை அணைக்கு விநாடிக்கு 1,081 கன அடி தண்ணீர் வரத்து ஏற்பட்டது. தொடர்ந்து நீர்வரத்து உள்ளதால், அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என்பதால், விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, வைகை அணைன் நீர்மட்டம் 63.71 அடியாக இருந்தது. அணைக்கான நீர்வரத்து 1,081 கனஅடியாக இருந்த நிலையில், அணையிலிருந்து குடிநீர் திட்டங்களுக்கு 72 கனஅடி மட்டுமே திறக்கப்படுகிறது.

Spread the love